விநாயகருடன் வந்து.. விருந்து வைத்து அசத்திய இஸ்லாமியர்கள்! பூரித்துப்போன கிருஷ்ணகிரி!
கிருஷ்ணகிரி: நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், இஸ்லாமியர்கள் விநாயகரை கொண்டு வந்து, அன்னதானம் வழங்கியுள்ளனர். இச்சம்பவம் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகா் சதுா்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 அமைப்புகள் பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றன.

முன்னதாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், தீயணைப்புத் துறை, மாநகராட்சி நிர்வாகத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும், காவல்துறையின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் 3 வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டாா். விநாயகர் சதுர்த்தியையொட்டி, சுமார் 13,000 இடங்களில் 35,000 விநாயகர் சிலைகளை அமைக்க காவல் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரியில் புதுப்பேட்டை பகுதியில், இஸ்லாமியர்கள் விநாயகர் சிலையை வழங்கி, பக்தர்களுக்கு அன்னதானமும் அளித்துள்ளனர். இது பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாடி நபி விழா குழுவினர் கூறுகையில், "மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, கடந்த 14 ஆண்டுகளாக நாங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் வீடு வீடாக சென்று நாங்கள் விநாயகரையும், பூஜை பொருட்களையும் வழங்கி வருகிறோம். அதேபோல விநாயகர் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் அன்னதானத்தையும் வழங்கி வருகிறோம்.
ஒரு காலத்தில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் சகோதர சகோதரியாகவும், மாமன் மச்சான்களாகவும் இருந்து வந்தனர். ஆனால், பிரிவினை சக்திகள் எங்களுக்கிடையே எதிர்ப்பை விதைத்தன. இதனை எதிர்த்தும், மறுப்பு தெரிவிக்கும் விதமாகவும் நாங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். இதன் மூலம், இந்த பகுதிகளில் மத மோதல்கள் எதுவும் நடப்பதில்லை.
இதேபோல எல்லா பகுதியிலும் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அப்படி இருந்தால் சாதி, மத மோதல்களே ஏற்படாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications