உபி பெண்ணுக்கு ஓசூரில் காதல்.. ஆத்திரத்தில் குடும்பத்தினர் எடுத்த முடிவு! சினிமாவை மிஞ்சிய சம்பவம்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சினிமா பாணியில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினரே பெப்பர் ஸ்பிரே அடித்து காரில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கர்நாடகாவில் வைத்து 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். செல்போன் சிக்னல் மற்றும் டவர் லொகேஷன் உதவியுடன் கடத்தல்காரர்களைப் பின்தொடர்ந்த போலீசார் இளம்பெண்ணை மீட்ட நிலையில், அவர் மேஜர் என்பதால் கணவனுடனேயே அனுப்பி வைத்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பைரோஜாபாத்தைச் சேர்ந்த நரேசிங் என்பவரது குடும்பத்தினர், கடந்த சில ஆண்டுகளாக ஓசூர் ராகவேந்திரா காலனி பகுதியில் வசித்து வந்தனர். இவரது மகள் கோவிந்த பிரியா (21), மூக்கண்டப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
அப்போது, ஓசூர் வெங்கடேஷ் நகரைச் சேர்ந்த சூர்யா (26) என்ற இளைஞருடன் கடந்த 7 ஆண்டுகளாக காதலில் இருந்துள்ளார் கோவிந்த பிரியா. இந்நிலையில், இருவரும் காதலிப்பது தெரிந்த நிலையில், இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காதல் திருமணம்
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆவலப்பள்ளி அட்கோ குடியிருப்பு பகுதியில் உள்ள நரசிம்மர் கோயிலில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்த பிரியாவின் தாய் சகுந்தலா மற்றும் சகோதரர்கள், கடந்த 13-ஆம் தேதி வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்திற்கே சென்றுவிட்டனர்.
குடும்பத்தினர் எதிர்ப்பு
சொந்த ஊரில் உறவினர்கள் கோவிந்த பிரியாவைப் பற்றி விசாரித்ததால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், சூர்யாவின் வீட்டிற்குச் சென்று மகளை மீட்கத் திட்டமிட்டனர். இதற்காக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வக்கீல் ரத்தோட் என்பவருடன் இணைந்து, நேற்று பிற்பகல் ஒரு காரில் சூர்யாவின் வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சகுந்தலா மற்றும் அவரது மகன்கள், அங்கிருந்த சூர்யா, கோவிந்த பிரியா மற்றும் அவர்களது உறவினர்கள் மீது திடீரென பெப்பர் ஸ்பிரே (Pepper Spray) அடித்து நிலைகுலையச் செய்தனர்.
பெப்பர் ஸ்பிரே
பெப்பர் ஸ்பிரேவால், கண் எரிச்சலில் அவர்கள் தவித்துக் கொண்டிருந்த வேளையில், கோவிந்த பிரியாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். பாதிக்கப்பட்ட சூர்யா உடனடியாக ஓசூர் அட்கோ (HUDCO) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட போலீசார், சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், செல்போன் சிக்னல் மற்றும் டவர் லொகேஷன் உதவியுடன் கடத்தல்காரர்களைப் பின்தொடர்ந்தனர்.
போலீஸ் மீட்பு
அப்போது, கர்நாடக மாநிலம் தொட்டஆலமரா ரோடு, ராமோஅள்ளி பகுதியில் மறைந்திருந்த கடத்தல் கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். இந்தச் சம்பவத்தில் கோவிந்த பிரியாவின் தாய் சகுந்தலா, சகோதரர்கள் பிண்டு குமார் நாயக், ஆகாஷ் மற்றும் கார் ஓட்டுநர் வக்கீல் ரத்தோட் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட கோவிந்த பிரியா பத்திரமாக மீட்கப்பட்டார். தலைமறைவாக உள்ள சந்தோஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காதல் திருமணத்திற்காகச் சொந்த மகளையே பெப்பர் ஸ்பிரே அடித்து குடும்பத்தினர் கடத்திய சம்பவம் ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications