ஊரை விட்டு ஓடிப்போனவங்க ஓட்டு போட வந்தா என்னாச்சு தெரியுமா? கிருஷ்ணகிரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்றைய தினம் காதல் ஜோடி ஒன்று மணக்கோலத்திலேயே வந்து தங்களது வாக்கினைப் பதிவு செய்துள்ளனர்.. இவர்களின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.. பதட்டமான நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் காட்டிய இந்த ஆர்வம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
தேர்தல் நாளான நேற்று பல்வேறு கவனிக்கத்தக்க சம்பவங்கள் நடைபெற்றன.. வாக்குச்சாவடிகளில் மக்கள் உற்சாகமாக வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.. சில இடங்களில் வித்தியாசமான நிகழ்வுகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன.. அவர்களின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பேசுபொருளானது..

ஜனநாயக கடமையை உணர்வுடன் நிறைவேற்ற வேண்டும் என்ற செய்தியும் இதனால் வலுப்பெற்றது.. குறிப்பாக திருமண உடையிலேயே வாக்குப்பதிவுக்கு வந்த புதுமண தம்பதிகள் அனைவரின் பாராட்டையும் பெற்றனர்..
நெகிழ்ச்சியில் டாக்டர் தம்பதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் தேர்தலின்போது ஒரு புதிய திருமண ஜோடி தங்கள் திருமண உடையிலேயே வந்து வாக்குப்பதிவு செய்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. ஆர்த்தி - ஆனந்தன் இவர்கள் 2 பேருமே டாக்டர்கள்.. தங்களது திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு நேரடியாக வேங்கிக்கால் ஜெய்பீம் நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த இவர்கள், ஜனநாயக கடமையை நிறைவேற்றியதால் அங்கு இருந்தவர்கள் அவர்களை பாராட்டினர்.
வாழ்க்கையின் முக்கியமான நாளில் வாக்களிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்த இந்த புதுமணத் தம்பதி, திருமண ஆடையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த காட்சி சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. "திருமணம் முக்கியம், ஆனால் வாக்குரிமை இன்னும் முக்கியம்" என்ற எண்ணத்துடன் அவர்கள் எடுத்த இந்த முடிவு பலருக்கும் உத்வேகம் அளித்ததாக பொதுமக்கள் கூறினர்.
பதறி வந்த புதுமணத் தம்பதி
அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் காதல் திருமணம் செய்த தம்பதியினர் ஓட்டளிக்க வந்தபோது, அவர்களை உறவினர்களே வழிமறித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த சித்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 26 வயதான மன்னார்.. அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் கிருத்திகாவும் மன்னாரும் கடந்த 3 வருஷமாக தீவிரமாக காதலித்து வந்தனர்.. இவர்களது காதலுக்கு இருவீட்டு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 2026 ஏப்ரல் மாசம் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.. சொந்த ஊரில் இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்த தம்பதியினர், அங்கிருந்து வெளியேறி ஓசூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வருகின்றனர்..
கிருஷ்ணகிரி கிருத்திகா
இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.. தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தாண்டபுரம் கிராமத்தில் தங்களுக்கு ஓட்டு இருந்ததால், ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்கிற ஆர்வத்தில் மன்னாரும் கிருத்திகாவும் நேற்று காலை தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.
இவர்கள் ஊருக்குள் நுழைந்ததை பார்த்த கிருத்திகாவின் தாய்மாமன்கள் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர்.. ஊரை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்தவர்கள் இங்கே ஓட்டு போட வரக்கூடாது என்று சொல்லி தகராறு செய்தனர்..
காதல் தம்பதிக்கு பாதுகாப்பு
வாக்குச்சாவடிக்கு செல்ல முயன்ற காதல் தம்பதியை தடுத்து நிறுத்திய உறவினர்கள், அவர்களை சரமாரியாக தாக்கினர்.. இதனால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது.. உயிருக்கு பயந்து தம்பதியினர் அங்கிருந்து தப்பி ஓடினர்.. ஓட்டளிக்க வந்த இடத்தில் தம்பதி தாக்கப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல பரவி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது.
உடனடியாக தலையிட்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், தம்பதியினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கி அவர்களை ஓட்டளிக்க வைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்..
ஆட்சியரின் அதிரடி உத்தரவை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தம்பதியினரை மீட்டு பாதுகாப்புடன் மீண்டும் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தனர்.. போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்ற மன்னார் மற்றும் கிருத்திகா ஆகிய 2 பேரும் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவு முடிந்த கையோடு பாதுகாப்பு கருதி போலீசார் அவர்களை பத்திரமாக ஓசூர் செல்லும் வரை வழி அனுப்பி வைத்தனர்.. தேர்தல் நேரத்தில் காதல் தம்பதி மீது உறவினர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் அஞ்செட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..












Click it and Unblock the Notifications