குளத்தில் மண் திருட்டு! புகார் சொன்னவருக்கு திமுக கவுன்சிலர் கொலை மிரட்டல்! பரபரப்பு ஆடியோ!
கிருஷ்ணகிரி: குளத்தில் மண் திருடியதை தடுத்து நிறுத்திய நபருக்கு திமுக கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வடக்கு ஒன்றியச் செயலாளராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் இருப்பவர் குமரேசன். இவரது மனைவி உஷாராணி ஒன்றிய சேர்மனாக உள்ளார்.
இந்நிலையில் தசநாயக்கன்பட்டியில் முறையான அனுமதியின்றி டிப்பர் லாரிகளில் மண் அள்ளுவதை கண்ட அப்பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர், இதனை தடுத்து நிறுத்தியதுடன் உரிய அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளார்.
திமுக கவுன்சிலரும், ஒன்றியச் செயலாளருமான குமரேசன் அனுமதியோடு தான் தாங்கள் மண் அள்ளுவதாக சவடால் பேசியிருக்கிறது மண் திருடிய குரூப்.
இதனிடையே மண் திருட்டை தடுத்து நிறுத்திய நடராஜனை அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட திமுக ஒன்றியச் செயலாளர் குமரேசன், அச்சில் ஏற்ற முடியாதபடி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தார்.

அதுமட்டுமல்ல கொலை மிரட்டலும் விடுத்ததோடு வீடு புகுந்து தாக்குதல் நடத்தினால் உனக்கு யார் வருவார்கள் எனவும் வினவினார். தனது செயலால் கட்சித் தலைமைக்கும், ஆட்சிக்கும் தான் அவப்பெயர் ஏற்படும் என்பதை அந்த நிர்வாகி சற்றும் சிந்திக்கவில்லை.
இதனிடையே இந்த ஆடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் திமுகவுக்கு தர்மசங்கடமான சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் வருவாய் ஆய்வாளரை தாக்கிய விவகாரத்தில் திமுக நிர்வாகி மகேஸ்வரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதற்குள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னொரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள காந்தி இது குறித்து விசாரித்து குமரேசனிடம் கடிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications