‛‛ஈ சாலா கப் நம்தே’’.. ஆர்சிபியை சாம்பியன் ஆக்கு ஆண்டவா! கிருஷ்ணகிரியில் கவனம் ஈர்த்த ரசிகர்கள்! ஆஹா!
கிருஷ்ணகிரி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 16வது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை ஒருமுறை கூட ஆர்சிபி அணி ஐபி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. இந்நிலையில் தான் நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் செய்த செயல் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
இந்தியா சார்பில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நடந்துள்ளன. தற்போது 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
இதுவரை அதிகபட்சமாக ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக எம்எஸ் தோனி வழிநடத்தும் சென்னை அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. இதுதவிர கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் தலா 2 முறையும், ராஜஸ்தான், குஜராத் அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

கோப்பை வெல்லாத ஆர்சிபி
ஐபிஎல் வரலாற்றில் 2008 முதல் பெங்களூர் அணி பங்கேற்று வந்தாலும் கூட இன்னும் ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. ஒவ்வொரு சீசனிலும் பலம்வாய்ந்த அணியாக களமிறங்கும் ஆர்சிபிக்கு கோப்பை அடிப்பதற்கான அதிர்ஷ்டம் இன்னும் கைக்கூடவில்லை. துவக்கத்தில் எதிரணிகளை பந்தாடும் ஆர்சிபி இறுதியில் பேட்டிங் அல்லது பவுலிங்கில் ஒருசேர சோடைபோய் தோல்வியை சந்தித்து பரிதாபமாக வெளியேறுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

ஈ சாலா கப் நம்தே
இதனால் தான் ஆர்சிபி அணி ரசிகர்களை அவர்களின் நண்பர்கள் இணையதளங்களிலும், பொது இடங்களிலும் கலாய்த்து வருகின்றனர். இருப்பினும் கூட ஆர்சிபி ரசிகர்கள் மட்டும் சோர்வடைவதே இல்லை. ஒவ்வொரு சீசன் துவக்கத்திலும், ‛‛ஈ சாலா கப் நம்தே''(கன்னட மொழியில் இந்த முறை கப் நமக்கு தான்) என உற்சாகத்துடன் ஆர்சிபியை அணிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். இதற்கு இந்த சீசனும் விதிவிலக்கல்ல. மார்ச் 31ல் ஐபிஎல் துவங்குவதற்கு முன்பே ஆர்சிபி பேன்ஸ்களும் பொன்மொழியான ‛‛ஈ சாலா கப் நம்தே'' முழக்கமிட்டு அந்த அணிக்கான ஆதரவு கரத்தை நீட்ட தொடங்கிவிட்டனர்.

மும்பையை பதம்பார்த்த ஆர்சிபி
இதற்கிடையே தான் கடந்த 2ம் தேதி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி மும்பை இந்தியன்ஸ் அணியைஎதிர்கொண்டது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன் குவித்த நிலையில் ஆர்சிபி அணி அந்த இலக்கை அதிரடியாக சேஸ் செய்து அசத்தியது. துவக்க ஆட்டக்காரராக இறங்கிய விராட் கோலி 49 பந்துகளில் 82 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் டூபிளசிஸ் 43 பந்துகளில் 73 ரன் எடுத்திருந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்த நிலையில் வெற்றி இலக்கை 2 விக்கெட்டுகளை இழந்து 16.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து வாகை சூடியது.

விருந்தாக அமைந்த மேட்ச்
கோலி, டூபிளசிஸ் ஆகியோர் நாலாபுறமும் சிக்ஸ், பவுண்டரிகள் விளாசியது உண்மையிலேயே இந்த போட்டி ஆர்சிபி ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்தது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இ அடுத்ததாக ஆர்சிபி அணி 6ம் தேதி இரவு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டிக்கு வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

ஆர்சிபி ஜெயிக்க வினோத செயல்
இந்நிலையில் தான் நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ரசிகர்கள் வினோத செயலை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். அதாவது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோப்பசந்திரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வெங்கடரமணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி தேரோட்டம் நடந்தது.

வாழைப்பழத்தில்..
தேரோட்டத்தின்போது மனதில் நினைப்பதை சாமியிடம் வேண்டி கொண்டு வாழைப்பழங்களில் எழுதி தேர் மீது வீசினால் அது நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் இன்று ஆர்சிபி ரசிகர்கள் பலரும் வாழைப்பழங்களில் ‛ஈ சாலா கப் நம்தே' என எழுதி தேர் மீது வீசினர். இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications