ஆம்புலன்ஸாக மாறிய தமிழக அரசுப்பேருந்து! பெண்ணின் உயிரை காக்க ஓட்டுநரின் துணிச்சல் முடிவு!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அரசுப் பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணின் உயிரைக் காக்க, ஓட்டுநர் முருகன் முன்னெடுத்த துணிச்சலான முடிவால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பெங்களூரில் இருந்து திருப்பத்தூருக்கு இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்தில் 55 வயது மதிக்கத்தக்க பாக்கியலட்சுமி என்ற பெண் பயணித்திருக்கிறார். திருப்பத்தூரை சேர்ந்த இவர் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் சொந்த ஊரான திருப்பத்தூருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

பேருந்து ஒசூரை கடந்து சென்று கொண்டிருந்த போது பேருந்திற்குள்ளேயே பாக்கியலட்சுமி மயங்கி விழுந்திருக்கிறார். முதலில் இவர் தூங்குவதாக நினைத்த பக்கத்தில் அமர்ந்திருவர்களுக்கு பிறகு தான் அவர் மயக்கமுற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்திருக்கிறார். ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு லொகேஷன் சொல்லி புரிய வைத்து அவர் வந்து சேர்வதற்குள் பாக்கிலட்சுமிக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த ஓட்டுநர் முருகன் துணிச்சலான ஒரு முடிவை எடுக்கிறார்.
ஆம்புலன்ஸ் வரும் வரை நடுரோட்டில் காத்திருக்காமல் பேருந்தில் வைத்தே அருகாமையில் இருந்த சூளகிரி அரசு மருத்துவமனைக்கு பாக்கியலட்மியை அழைத்துச் சென்ற ஓட்டுநர் முருகன், தக்க நேரத்தில் அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். இதனால் உடனடியாக பாக்கியலட்சுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து அசம்பாவிதத்தை தவிர்த்தனர்.
ஓட்டுநர் முருகனுக்கு அரசுப் பேருந்தில் பயணித்த மற்ற பயணிகள் ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் ஒரு உயிரை காப்பாற்ற முடிந்தது சாத்தியமானது. மற்ற பயணிகள் ஓட்டுநர் முருகனிடம் கோபத்தையோ, எரிச்சலையோ காட்டியிருந்தால் ஆம்புலன்ஸ் வந்து சேரும் வரை ரோட்டில் தான் நின்று கொண்டிருந்திருக்க வேண்டும். சமயோஜித செயல்பாட்டால் ஒரு உயிரை காப்பாற்றிவிட்டோம் என்ற மன நிம்மதியுடன் ஓட்டுநர் முருகன் புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே திருப்பத்தூரில் உள்ள பாக்கியலட்சுமி குடும்பத்தினருக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வயதான காலத்தில் தனியாக செல்வதை முதியோர்கள் தவிர்க்க வேண்டும் என்பதையும் பிள்ளைகளும் தங்கள் வயதான பெற்றோரை இது போல் தனியாக அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்பதையும் இந்த நிகழ்வு உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications