கிருஷ்ணகிரியில் திருமண வீட்டில் நடந்த பெரும் சோகம்.. கலங்காமல் மாப்பிள்ளையின் தாயார் எடுத்த முடிவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், இன்று மாப்பிள்ளையின் தந்தை திடீரென மாரடைப்பால் இறந்த சோக சம்பவம் நடந்துள்ளது. எனினும் தாய் எடுத்த தைரியமான முடிவினால், திருமண நிகழ்ச்சியை நிறுத்தாமல், இறந்த தந்தையின் உடல் முன்பே, பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டினார். உற்றார் உறவினர்கள் கண்ணீர் மல்க மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் என்றால் ஒருவாரத்திற்கு முன்பே திருமண வீடு களை கட்டி விடும். உறவினர்கள் வீட்டிற்கு வரத்தொடங்குவது முதல், வீட்டில் பந்தல் அலங்காரம் என கிட்டதட்ட ஒருவாரத்திற்கு திருமணம் வீடு ஜொலிஜொலிக்க ஆரம்பித்து விடும். ஆனால், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் திருமண வீடுகளில் சில நேரம் இயற்கையின் செயலால் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று விடுகிறது.

தடல்புடலாக நடந்த திருமண ஏற்பாடுகள்
இப்படியான தருணங்களில் சில இடங்களில் திருமணத்தை கூட நிறுத்தி விடுகிறார்கள். சிலர் இறந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக எவ்வளவு துயரம் என்றாலும் கூட அந்த திருமண நிகழ்ச்சியை நடத்திவிடுவதை சில நேரங்களில் பார்க்க முடியும். நெஞ்சை அடைக்கும் துக்கம் இருந்தால் கூட கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இப்படியான ஒரு சம்பவம்தான் கிருஷ்ணகிரியில் நடைபெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பெருகோபணப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 60). இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு மனிஷ் என்ற 26 வயது மகன் இருக்கிறார். மனிஷுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்த வரதராஜ், பர்கூர் பகுதியை சேர்ந்த காவிய பிரியா என்ற பெண்ணை மணம் முடிக்க சம்மதித்தனர். இரு குடும்பத்தினரின் சம்மதத்தில் இந்த திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது.

மாரடைப்பால் உயிரிழந்த தந்தை
பத்திரை, பந்தக்கால் முதல் திருமண நிச்சயதார்த்தம் வரை நடந்து முடிந்துவிட்டது. உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வீட்டுக்கு வந்தனர். விடிந்தால் கல்யாணம் என்று இருந்த நேரத்தில் மாப்பிள்ளையின் தந்தை வரதராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு வரதராஜ் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தாய் எடுத்த தைரியமான முடிவு
இதனால் வரதராஜ் குடும்பத்தினர் மட்டுமின்றி, பெண் வீட்டார் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். எல்லா ஏற்பாடுகளையும் செய்த பிறகு இப்படியொரு துயர சம்பவம் நிகழ்ந்துவிட்டதே என்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தொடர்ந்து கல்யாண நிகழ்ச்சியை அப்படியே விட்டு விட எண்ணிய நிலையில், வரதராஜின் மனைவி மஞ்சுளா, என் கணவர் எப்போதும் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தான் ஆசைப்பட்டார். அப்போது தான் அவரது ஆத்மா சாந்தியடையும். எனவே திருமணத்தை நிறுத்த வேண்டாம்" என்று கூறினார்.
தந்தை உடல் முன்பே தாலி கட்டிய மகன்
இதன் பின்னர் பெருகோப்பனபள்ளி கிராம ஊர் மக்களும், பஞ்சாயத்து தலைவர்களும் கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பெண் வீட்டினரும் சம்மதம் தெரிவித்ததும், இறந்த வரதராஜுக்கு புதிய பட்டு வேஷ்டி அணிய வைத்து, அவர் கையினால் தாலியை எடுத்து கொடுக்க வைத்து இந்த திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்களும் கண்ணீர் மல்க மணமக்களை வாழ்த்தினர். திருமணம் நடந்து முடிந்த பிறகு வரதராஜின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்தது. இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யபட்டது.












Click it and Unblock the Notifications