பிரிட்டன் அரசை விமர்சித்த தொகுப்பாளர்.. பணி இடைநீக்கம் செய்த பிபிசி.. நடந்தது என்ன?
பிபிசியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளும், பெரும்பாலான மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
லண்டன்: பிரிட்டன் அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்த பிபிசி தொகுப்பாளரை அந்த தொலைக்காட்சி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.
பிரிட்டன் ஊடகமான பிபிசி தொலைக்காட்சி அண்மையில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. இரண்டு பாகங்களாக இருக்கும் அந்த ஆவணப்படம் முழுக்க முழுக்க குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரைத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மத்திய அரசு இந்த ஆவணப்படத்தை தடை செய்தது. இதன் தொடர்ச்சியாக டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் ரெய்டுகளும் நடத்தப்பட்டன.

இதனிடையே, இந்திய அரசின் இந்த ரெய்டு நடவடிக்கை பிரிட்டனை ஒரு உலுக்கு உலுக்கியது. பிபிசியில் நடத்தப்பட்ட இந்த ரெய்டானது, பிரிட்டனுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை என்பதை போல அந்நாட்டு அரசியல் கட்சிகள் விமர்சித்தன. மேலும், இந்த விவகாரம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் பெரும் பூதாகரமாக வெடித்தது. இந்தியாவில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும், ஊடகங்கள் மிரட்டப்படுவதாகவும் அந்நாட்டு எம்.பி.க்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், பிரிட்டன் அரசு சார்பில் எம்.பி. டேவிட் ரூட்லி, ஒருபடி மேலே சென்று, "உலக அளவில் பிபிசி இயங்குவது மிகவும் முக்கியமானது என்பதை மறுக்க முடியாது. பிரிட்டனில் உள்ள ஆளுங்கட்சியை கூட பிபிசி விமர்சித்திருக்கிறது. ஊடகங்களுக்கு கருத்து சுதந்திரம் மிகவும் அவசியம். அரசாங்கத்துக்கு எதிராக பேசியதற்காக ஊடகங்கள் குறிவைக்கப்படுவதை ஏற்க முடியாது" என அவர் கூறினார்.
இந்நிலையில், பிரிட்டன் அரசை விமரிசித்த பிபிசி தொகுப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பிபிசி ஸ்போர்ட்ஸ் சேனலில் 'மேட்ச் ஆப் தி டே' என்ற கால்பந்து போட்டிகள் தொடர்பான நிகழ்ச்சியை ஹேரி லிங்கர் என்பவர் தொகுத்து வழங்கி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது, பிரிட்டன் அரசின் அகதிகள் கொள்கையை கடுமையாக விமர்சித்தார் ஹேரி லிங்கர். இது பிரிட்டனில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, ஹேரி லிங்கரை பிபிசி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. பிபிசியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளும், பெரும்பாலான மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications