Boris Johnson: 48 மணி நேரத்தில் 54 பேர் ராஜினாமா.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகினார்
லண்டன்: அரசியல் நெருக்கடி அதிகரித்து உள்ள நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Recommended Video
பிரிட்டன் பிரதமராக உள்ளவர் 58 வயதான போரிஸ் ஜான்சன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் பிரதமராக உள்ளார்.
கேவிட் கேமரூன், தேசரா மே என இரு பிரதமர்களால் முடியாத பிரெக்ஸிட் வெற்றிகரமாக முடித்துக் காட்டியவர் போரிஸ் ஜான்சன்.

சர்ச்சை
இதனால் தொடக்கத்தில் இவருக்கு மக்கள் செல்வாக்கு சற்று அதிகமாகவே இருந்தது. இருப்பினும், அதன் பின்னர் இவரது ஆட்சியில் தொடர்ச்சியாகச் சர்ச்சையில் சிக்கி வந்தது. குறிப்பாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் பிரிட்டனில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இருந்தது. மக்கள் கடும் துன்பத்தில் இருந்த சமயத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ஊழியர்கள் மது பார்ட்டி வைத்தார். இது தொடர்பான படங்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அழுத்தம்
அதேபோல பல்வேறு கொள்கை மற்றும் மசோதாக்களில் அவரது அரசு யூ டர்ன் போட்டது. மேலும் தொழிலதிபர்களைக் காக்க விலைவாசி உயர்வை அவர் கட்டுப்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் பாலியல் புகாருக்கு உள்ளான ஒருவருக்கு முக்கிய பதவி வழங்கியதாகச் சர்ச்சை எழுந்தது. பாலியல் புகார் குறித்து போரிஸ் ஜான்சனகுக்கு தெரியும் என்றும் அதைத் தெரிந்தே அவருக்குப் பதவி வழங்கி உள்ளதாகவும் பலரும் குற்றஞ்சாட்டினர்.

அமைச்சர்கள்
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியிலேயே இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதைக் கண்டித்து வரிசையாகப் பல அதிகாரிகள் ராஜினாமா செய்யத் தொடங்கினர். இப்படிக் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் என 54 முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

அரசியல் நெருக்கடி
இது போரிஸ் ஜான்சனுக்கு மிகப் பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. சில மணி நேரத்தில் இப்படி 50க்கும் மேற்பட்ட முக்கிய அமைச்சர்களும் அதிகாரிகளும் ராஜினாமா செய்துள்ளது அரசையே முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர்களில் மட்டும் மொத்தம் எட்டு பேர் கடந்த சில மணி நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் போரிஸ் ஜான்சன் இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டார்.

ராஜினாமா
இதன் காரணமாக போரிஸ் ஜான்சன் இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமர் தேர்வு செய்யும் வரை இடைக்கால பிரதமராக தொடர உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதற்கிடையே கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் போரிஸ் ஜான்சன் இன்று விலக உள்ளதாக என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னால் தான், நிச்சயம் தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications