பிரிட்டனில் வரும் ஜூலை 4ம் தேதி பொதுத்தேர்தல்.. ரிஷி சுனக் சந்திக்கும் முதல் பெரிய சம்பவம்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் வரும் ஜூலை 4ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். கேபினட் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நாட்டின் பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பினை அவர் வெளியிட்டிருக்கிறார்.
பிரிட்டன் நாட்டை பொறுத்தவரை அரசியலமைப்பு ரீதியாக 2025 ஜனவரிக்குள் அங்கு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் , இது தொடர்பாக பிரதமர் சுனக் இது 2024 இன் பிற்பகுதியில் நடைபெறும் என்று பலமுறை கூறியிருந்தார். இந்நிலையில் பிரிட்டன் வெளியுறவு செயலர் டேவிட் கேமரூன் அல்பேனியா பயணத்திலிருந்த நிலையில், திடீரென உடனே நாடு திரும்புமாறு அழைக்கப்பட்டார். அப்போதே தேர்தல் குறித்துதான் என்று ஊடகங்களில் செய்திகள் கசிய ஆரம்பித்தது. இது ஒருபுறம் எனில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிழக்கு ஐரோப்பாவிற்கான பயணத்தை திடீரென ஒத்திவைத்தார்.

இதையடுத்து பிரிட்டனில் உள்ள பிபிசி, ஐடிவி, ஸ்கை நியூஸ் மற்றும் தி கார்டியன் உள்ளிட்ட முக்கிய செய்தி நிறுவனங்கள், அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ டவுனிங் ஸ்ட்ரீட் அறிக்கையில் சுனக் தேர்தல் தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டியிருந்தன.
இதனிடையே ஊடகங்கள் எதிர்பார்த்தபடியே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் ஜூலை 4 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
44 வயதான ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ள போகின்ற தேர்தல் ஆகும். கடந்த அக்டோபர் 2022 இல் நடந்த வாக்கெடுப்புக்குப் பிறகு அவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பிரதமரானார்.. வரும் ஜூலையில் நடைபெற்ற பிரிட்டன் தேர்தல் என்பது, 2016 ஆம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெறவுள்ள மூன்றாவது பொதுத் தேர்தலாகும்.
தற்போது பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 14 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு எதிர்க்கட்சியான தொழிற்கட்சியிடம் தோல்வியடையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுவதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.
இதனிடையே பிரிட்டனில் தொழிலாளர் கட்சியும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தேர்தலுக்கு தயாராக இருப்பதாக கூறியிருந்தது.
பிரதமர் எப்போது தேர்தலை அழைத்தாலும் நாங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம். எங்களிடம் ஒரு முழுமையான ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரக்குழு தயாராக உள்ளது, நாடு தற்போது பொதுத் தேர்தல் வேண்டும் என்று விரும்புகிறது என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று தொழிலாளர் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications