இந்த வயசில் புற்றுநோயா.. கலங்கி துடித்த மகள்! சிகிச்சைக்கு முன்.. பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் நாட்டில் உள்ள குடும்பம் ஒன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தங்களது 22 வயது இளம் பெண்ணுடன் கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் முன்கூட்டியே இவர்கள் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது மகளுக்கு விரைவில் சிகிச்சை தொடங்க உள்ள நிலையில் இம்முடிவை குடும்பத்தினர் எடுத்துள்ளனர்.

புற்றுநோய்
இங்கிலாந்தின் லங்காஷயரில் உள்ள பாரோஃபோர்டைச் சேர்ந்த 22 வயதான லாரா நட்டால் கடந்த 2018ல் வழக்கமாக மேற்கொள்ளும் கண் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி செய்தி காத்திருந்திருக்கிறது. அதாவது, லாராவுக்கு மூளை புற்றுநோய்க்கான அறிகுறிகள் தெரிந்துள்ளன. முதலில் அவர் இதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் உடல் நிலையில் மெல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனையில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடல்நிலையில் முன்னேற்றம்
இதனையடுத்து, 2018ம் ஆண்டிலிருந்து சிகிச்சையை தொடர்ந்து வருகிறார். ஆனால் இவர் அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்து தற்போது வரை பெரும் நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் லாராவுக்கு பல சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இதில் உற்சாகமடைந்த லாரா அவருக்கென பல சின்னஞ்சிறிய ஆசைகளை வளர்த்துக்கொண்டுள்ளார்.

ஆசைகள்
அதாவது பட்டப்படிப்பை முடிப்பது, இங்கிலாந்தில் ஆண்டு தோறும் நடக்கும் மிகப்பெரிய மரத்தான் போட்டியில் பங்கேற்பது, செய்தி ஊடகத்தில் வானிலை முன்னறிவிப்பை வழங்குவது ஆகியவற்றை செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் லாராவின் ஆசைகள். தொடர் சிகிச்சை, குடும்பத்தினரின் அரவணைப்பு ஆகியவற்றுடன் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வந்த லாராவுக்கு மீண்டும் பிரச்னை தொடங்கியது. சிகிச்சைக்கு பின்னர் புற்றுநோய் கட்டியின் அளவு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் கட்டி வளர்ந்துள்ளது.

சிகிச்சை
இதனால் மீண்டும் தீவிர சிகிச்சைக்குள் லாரா நுழைய இருக்கிறார். இம்முறை அவருக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. பொதுவாக இம்மாதிரியான கதிரியக்க சிகிச்சைகள் 45 நாட்கள் வரை மேற்கொள்ளப்படும். இதனால் லாரா கிறிஸ்துமஸை தவறவிட்டு விடுவார் என்பதால் தாங்கள் முன்கூட்டியே இதனை கொண்டாடுவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். லாராவின் சிகிச்சைக்காக அந்நாட்டு நகைச்சுவை நடிகர் நிதி திரட்டி வருகிறார். பல்வேறு அமைப்பினரும், பிரபலங்களும் லாராவுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகளுக்காக குடும்பத்தினர் முன்கூட்டியே கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ள சம்பவம் அந்நாட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications