சென்னைக்கு அடித்த ‘லக்'.. முதல் பந்திலேயே விஜய் மெகா சிக்ஸ்.. திமுக - அதிமுக கூட இப்படி செய்ததில்லை
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவின் கோட்டையான சென்னையை உடைத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் திமுக, அதிமுக வரலாற்றில் இல்லாத வகையில் முதல்வர் விஜய் சென்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். சென்னையில் வென்ற 14 எம்எல்ஏக்களில் 7 பேருக்கு 'டாப்' பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் முழுவிவரம் வருமாறு:
தலைநகர் சென்னையில் மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சென்னை எப்போதும் திமுகவின் கோட்டை என சொல்லப்படும். ஆனால் இந்த சட்டசபை தேர்தலில் சென்னையின் திமுக கோட்டையில் ஓட்டை போட்டுள்ளது முதல்வர் விஜய்யின் தவெக. மொத்தமுள்ள 16 சட்டசபை தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதில் முதல்வர் விஜய்யும் ஒருவர் ஆவார்.

திமுகவை எடுத்து கொண்டால் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின், துறைமுகத்தில் சேகர்பாபு ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றனர். மற்றபடி 14 தொகுதிகளிலும் திமுக மண்ணை கவ்வியது. குறிப்பாக முதல்வராக களமிறங்கிய ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபுவிடம் வீழ்ந்தார்.
முதல்வர் + 4 அமைச்சர்கள்
இந்நிலையில் தான் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் சென்னையில் இருந்து வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வர் விஜய் அமைச்சரவையில் 9 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இந்த 10 பேரில் 5 பேர் சென்னையில் வென்றவர்கள். முதல்வர் ஜோசப் விஜய் பெரம்பூர் சட்டபை தொகுதியில் வென்ற நிலையில் முதல்வராகி உள்ளார்.
இதற்கு அடுத்தப்படியாக திநகரில் வென்ற புஸ்ஸி ஆனந்த் ஊரக மேம்பாட்டு மற்றும் குடிநீர் திட்ட துறை அமைச்சராகி உள்ளார். வில்லிவாக்கத்தில் வென்ற ஆதவ் அர்ஜூனா பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகி உள்ளார். மயிலாப்பூரில் வென்ற வெங்கடரமணன் உணவு துறை அமைச்சராகவும், எழும்பூரில் வென்ற ராஜ்மோகன் பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.
சபாநாயகர் + அரசு தலைமை கொறடா
மேலும் அமைச்சர் பதவிகள் தவிர ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்ற ஜேசிடி. பிரபாகர் சபாநாயகராகவும், விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் வென்ற சபரிநாதன் அரசு தலைமை கொறடா பதவியையும் விஜய் வழங்கி உள்ளார். இதில் சபரிநாதன் விஜய்யின் நீண்டகால டிரைவர் ராஜேந்திரனின் மகன் ஆவார். சபாநாயகர் மற்றும் அரசு தலைமை கொறடா பதவி ஆகியவை அமைச்சர் பதவிக்கு நிகரானது.
14ல் 7 பேருக்கு பொறுப்பு
அதன்படி பார்த்தால் சென்னையில் 16ல் 14 தொகுதிகளில் வென்ற தவெகவில் 7 பேருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி இதுவரை நடந்தது இல்லை. கடந்த கால திமுக மற்றும் அதிமுக அரசுகளில் மூன்று அல்லது நான்கு அமைச்சர்கள் மட்டுமே தலைநகரில் இருந்து இடம் பெற்றிருந்தனர்.
2021 -2026 வரை ஆட்சியில் இருந்த திமுகவில் அதிகபட்சமாக 4 பேருக்கு மட்டுமே முக்கிய பொறுப்பு வழங்கப்படும். கொளத்தூரில் வெற்றி பெற்ற ஸ்டாலின் முதல்வரானார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் வென்ற உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானார். துறைமுகத்தில் வென்ற சேகர்பாபு, சைதாப்பேட்டையில் வென்ற மா சுப்பிரமணியன் ஆகியோர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் தற்போது அதனை தவெக முறியடித்துள்ளது.
சென்னைக்கு அடிக்கும் 'லக்'
இதன்மூலம் சென்னைக்கு விஜய் முக்கியத்துவம் கொடுப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இதன்மூலம் சென்னைக்கு ஜாக்பாட் அடிக்கலாம். அமைச்சர்கள் அதிகம் உள்ளதால் சென்னையில் பல்வேறு முக்கிய நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவாக நடக்கலாம். ரூ.1,000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டம், ரூ.3,225 கோடி கொசஸ்தலை ஆறு வடிகால் பணிகள், ரூ.5,000 கோடிக்கு அதிகமான திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகள் இன்னும் விரைவுப்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் மக்களின் பிற பிரச்சனைகளுக்கும் எளிதாக தீர்வு எட்டப்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் தவெகவினர்.
வடசென்னைக்கு முக்கியத்துவம்
இதுபற்றி கொளத்தூரில் முக ஸ்டாலினை வீழ்த்திய விஎஸ் பாபு கூறுகையில், ''சென்னையில் வென்றவர்களுக்கு அதிக அமைச்சர் பதவி கொடுக்கப்படுவது என்பது இங்குள்ள மக்கள் எங்களுக்கு கொடுத்த பெரும் ஆதரவுக்கு நன்றிகடனாக அமைகிறது. இவர்கள் சென்னையின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்'' என்றார்.
ஆர்கே நகரில் வென்ற தவெக எம்எல்ஏ மேரி வில்சன் கூறுகையில், ''முதல்வர் பெரம்பூரை பிரதிநிதித்துவப்படுத்துவதால், வட சென்னைக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். அடுத்த உள்ளாட்சி மற்றும் மக்களவைத் தேர்தல்களுக்கான அடித்தளத்தையும் முதல்வர் இங்கு பலப்படுத்த விரும்பலாம்" என்றார்.















Click it and Unblock the Notifications