ஆங்கில கால்வாயில் அகதிகள் படகு கவிழ்ந்து கோர விபத்து.. குழந்தை, பெண்கள் உட்பட 31 பேர் உயிரிழப்பு
லண்டன்: பிரான்ஸ் நாட்டில் இருந்து பிரிட்டனுக்கு அகதிகளை ஏற்றி வந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 27 அகதிகள் உயிரிழந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் பல நூறு அகதிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான முறையில் முறைகேடாகப் படகில் பயணித்து பிரிட்டன் வர முயல்கின்றனர்.
இந்த ஆபத்தான பயணம் சில சமயங்களில் கோரமான விபத்துகளாகவும் மாற, பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
சபரிமலை ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் பதினெட்டாம்படி பூஜை - 2036 வரை முன்பதிவு

27 அகதிகள் உயிரிழப்பு
அப்படி ஓர் கோர விபத்து தான் நேற்றைய தினம் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து அகதிகளை ஏற்றிக் கொண்ட படகு ஒன்று ஆங்கில கால்வாயில் நேற்றைய தினம் பிரிட்டன் நாட்டை நோக்கிப் புறப்பட்டுள்ளது. இருப்பினும், படகு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ஒரு குழந்தை, 5 பெண்கள் உட்பட 31 அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆங்கில கால்வாயில் ஏற்படும் மிக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆபத்தான பயணம்
பிரான்ஸ் நாட்டில் இருந்து அகதிகள் பிரிட்டன் நாட்டு செல்வது வழக்கமான ஒன்று தான். இருப்பினும், பிரிட்டன் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த 2018இல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. இது தொடர்பான பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் வேறுவழியின்றி அகதிகள் ஆபத்தான ஆங்கில கால்வாய் மூலம் பிரிட்டன் வரத் தொடங்கினர். அதன் பிறகு அதிக பேரைப் பலிகொண்ட விபத்தாக இது உள்ளது.

பிரான்ஸ் அதிபர் இரங்கல்
இந்த கோர விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஆங்கில கால்வாயை "கல்லறையாக" மாற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்தார். மேலும், கடத்தல்காரர்களே இதற்குக் காரணம் என்று அவர்களைத் தடுக்க பிரிட்டன் நாட்டுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்துள்ள பிரான்ஸ் காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பிரிட்டன் பிரான்ஸ்
பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனும் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், அகதிகள் இப்படி ஆபத்தான முறையில் பயணிப்பதைத் தடுத்து நிறுத்த பிரான்ஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த சில ஆண்டுகளாகவே அகதிகள் விவகாரத்தில் பிரான்ஸ்- பிரிட்டன் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு நிலைமை மேலும் மோசமானது.

எத்தனை பேர் உயிரிழப்பு
இந்த சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறினார். இந்த படகில் மொத்தம் 34 பேர் பயணித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முதலில் 31 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், பின்னர் பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் 27 பேர் மட்டுமே உயிரிழந்ததாகத் தெரிவித்தது. மேலும்., 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல்போன மற்றவர்களை மீட்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு மடங்காக அதிகரிப்பு
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் சுமார் 31,500 பேர் பிரான்ஸ் நாட்டில் இருந்து பிரிட்டன் செல்ல முயன்றுள்ளனர் என பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 7,800 பேர் கடலில் மீட்கப்பட்டுள்ளனர். அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முறைகேடாகப் பிரிட்டன் நுழைய முயலும் அகதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. சிறிய படகில் அதிக அகதிகளை ஏற்றிக் கொண்டு மேற்கொள்ளப்படும் பயணங்கள் சில சமயங்களில் கோர விபத்துகளாகவும் முடிகிறது.