பாலஸ்தீனம் தனி நாடாக.. திடீரென அங்கீகாரம் அளித்த அமெரிக்க நட்பு நாடுகள்.. ஆனால், எல்லாம் பம்மாத்து!
லண்டன்: கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் திடீரென, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. இது காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கும், மேற்கு கரையில் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் ஒரு பதிலடியாகப் பார்க்கப்படுகிறது. இந்த அங்கீகாரம் உலக அளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இது உண்மையிலேயே பாலஸ்தீனிய மக்களுக்கு உதவுமா என்றால் இல்லை என்பதே பதில்.
அங்கீகாரத்தின் முக்கியத்துவம் என்ன?
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் நீண்ட காலமாக, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்போம் என்ற கொள்கையில் இருந்தன. இப்போது, அந்த நிலையை இந்த நாடுகள் மாற்றிக் கொண்டுள்ளன. இது இஸ்ரேலுக்கு ஒரு பெரிய தர்மசங்கடத்தையும், உலக அளவில் இஸ்ரேல் மேலும் தனிமைப்படுவதையும் காட்டுகிறது. இருப்பினும், இந்த அங்கீகாரம் உடனடியாக பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அங்கீகாரம் அறிவிக்கப்பட்ட அதே நாளில், காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 55க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இது வெறும் எஸ்கேப் நடவடிக்கையா?
அரசியல் நிபுணர்கள் இதை ஒரு அடையாளப்பூர்வமான நடவடிக்கை (symbolic action) என்று அழைக்கின்றனர். அதாவது, இந்த நாடுகள் தங்கள் உள்நாட்டு மக்களிடமிருந்து வரும் கடுமையான அழுத்தத்தைக் குறைப்பதற்காக இதைச் செய்கின்றன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்தத் தலைவர்கள், தங்கள் மக்களிடம் "நாங்கள் பாலஸ்தீனியர்களுக்கு ஏதோ செய்கிறோம்" என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், அதே நேரத்தில், இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை விதிப்பது, ஆயுத விற்பனையை நிறுத்துவது அல்லது காசா மீது வான் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவது போன்ற உண்மையான, உறுதியான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவில்லை. இதுவே, இந்த அங்கீகாரம் தங்களை உள்நாட்டு கோபத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நடவடிக்கை என்று பார்க்கப்படுகிறது.
பிரிட்டனுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது
பிரிட்டன் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது. 108 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டன் அரசு வெளியிட்ட பால்ஃபோர் பிரகடனம் தான், பாலஸ்தீன நிலத்தில் யூதர்களுக்கு ஒரு தனி நாட்டை உருவாக்க உதவியது. இதுதான் பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தை இழக்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
எனவே, பிரிட்டனின் இந்த அங்கீகாரம், தங்கள் வரலாற்றுப் பிழையை சரிசெய்யும் ஒரு முயற்சி என்றும், பாலஸ்தீன மக்களின் சுதந்திர உரிமையை அங்கீகரிக்கும் ஒரு நடவடிக்கை என்றும் பாலஸ்தீனியர்கள் கருதுகின்றனர்.
அங்கீகாரம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும்?
- இந்த அங்கீகாரத்தின் மூலம், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பாலஸ்தீன அரசுடன் அதிகாரபூர்வமான ஒப்பந்தங்களைச் செய்ய முடியும்.
- அதேபோல், இந்த நாடுகள் பாலஸ்தீனத்திற்கு முழுநேர தூதர்களை நியமிக்க முடியும். உதாரணமாக, பிரிட்டன் ஹுசாம் ஜோம்லாட்டை பாலஸ்தீன தூதராக அங்கீகரித்துள்ளது.
- இருப்பினும், இந்த அங்கீகாரம் பாலஸ்தீனத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் (UN) ஒரு முழு உறுப்பினர் நாடாக மாற உதவாது. ஏனெனில், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கு தடை போடும்.
அடுத்த கட்டம் என்ன?
பாலஸ்தீனத்தை உலக நாடுகள் அனைத்தும் அங்கீகரித்தாலும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வராத வரைக்கும் பாலஸ்தீனியர்களின் நிலை மாறாது.
நிபுணர்களின் கருத்துப்படி, வெறும் அங்கீகாரத்தை மட்டும் நம்பியிருக்காமல், சர்வதேச நாடுகள் இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும், தூதரக உறவுகளை துண்டிக்க வேண்டும், மற்றும் போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற உறுதியான நடவடிக்கைகளே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர உதவும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications