“Out ஆவுடா”.. லண்டன் ஓவலில் காட்டப்பட்ட தமிழ் பதாகை! டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரசிகரின் தரமான சம்பவம்
லண்டன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை காண வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ரசிகர் ஒருவர் செய்த சம்பவம் இன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்து உள்ள ஓவல் மைதானத்தில் 2 வது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதில் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, முஹம்மது ஷமி, முஹம்மது சிராஜ், அஜிங்கியா ரஹானா, சடேஸ்வர் புஜாரா, உமேஷ் யாதவ், ஷுப்மன் கில், சர்துல் தாக்கூர், ஸ்ரீகர் பரத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
போட்டியின் சூழலுக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்று கூறி உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளர் அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், நேதன் லயன், கேமரான் கிரீன், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட், ஸ்காட் போலாண்ட் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது இந்தியா ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அணிவகுத்து நின்றனர். அப்போது இரு அணி வீரர்களும் தங்களின் கைகளில் கறுப்பு பட்டைகளை அணிந்து இருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவில் 288 உயிர்களை பறித்த ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரு நாட்டு வீரர்களும் கறுப்பு பட்டை அணிந்தனர்.
அத்துடன் இரு அணியினர் ஒடிசா ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர். போட்டி தொடங்கிய உடனே இந்திய அணிக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை ரன் ஏதும் எடுக்க விடாமல் ஆட்டமிழக்க செய்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ்.
2-1 என்ற நிலையில் ஆஸ்திரேலியா தடுமாறிக் கொண்டு இருக்க, அடுத்து வந்த லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த வார்னர் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மதிய உணவு இடைவெளிக்கு முன் வார்னர் சர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவெளிக்கு பின் லபுஷேனை வீழ்த்தினார் முஹம்மது ஷமி.
அடுத்து ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட்டும், ஸ்டீவன் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்து நிலையான பேட்டிங்கை செய்தி வருகின்றனர். டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். இந்த போட்டியை காண ஓவல் மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் குழுமி உள்ளனர். போட்டியின்போது தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ரசிகர் "OUT ஆவுடா" என்று தமிழில் எழுதிய பதாகையை காட்டி உள்ளார். இந்த புகைப்படம் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications