"மொத்தம் 4 காரணங்கள்!" ஆட்சி ஓகே என்றாலும் ரிஷி சுனக் கட்சிக்கு வரலாற்றில் இல்லாத மோசமான தோல்வி ஏன்?
லண்டன்: பிரிட்டன் நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. ரிஷி சுனக் கட்சி இந்தளவுக்குப் படுதோல்வியைச் சந்திக்க என்ன காரணம்.. ரிஷி சுனக் காலத்தில் பொருளாதாரம் சீரான போதிலும் மக்கள் இந்தளவுக்குக் கோபத்தில் இருக்க என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டில் கன்சர்வேடிவ் கட்சியைப் பொறுத்தவரைக் கடந்த 2010இல் டேவிட் கேமரூன் பிரதமராக இருந்த போது அவர்களின் செல்வாக்கு பிரிட்டனில் அதிகரித்தது.

டேவிட் மேகரூன்: உலக பொருளாதார மந்த நிலைக்குப் பின்னர் ஆட்சியைப் பிடித்த டேவிட் மேகரூன், பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தினார். அரசு செலவுகளைக் கணிசமாகக் குறைத்தார். பிரிட்டனில் 2ம் உலகப் போருக்குப் பிறகு அந்நாட்டு அரசு இந்தளவுக்குச் செலவுகளைக் குறைத்ததே இல்லை. அவரது ஆட்சியில், அரசின் செலவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 41 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைந்தது.
2015இல் நடந்த தேர்தலில் அவர் மீண்டும் வென்று ஆட்சியைப் பிடித்த போதிலும் அவர் ஓராண்டில் பதவி விலகினார். ஏனென்றால் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட்டை அவர் கடுமையாக எதிர்த்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறப் பிரிட்டன் மக்கள் வாக்களித்ததால், இங்கிலாந்து பிரதமர் பதவியை கேமரூன் ராஜினாமா செய்தார்.
சர்ச்சை நாயகன் போரிஸ் ஜான்சன்: இதையடுத்து தெரசா மே பதவியேற்றார். இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து வெளிறேயும் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைப்பதில் இழுபறி நிலவிய நிலையில், அவர் 2019இல் பதவி விலகினார். அதன் பிறகு பிரதமரான போரிஸ் ஜான்சன், சில மாதங்களில் தேர்தலை அறிவித்தார். பிரெக்ஸிட் சட்டத்திற்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதை முன்வைத்தார் பிரச்சாரம் செய்தார்.
அதில் மிகப் பெரிய வெற்றி கண்ட அவர் பிரெக்சிட்டை நிறைவேற்றுவதன் மூலம் தனது உறுதிமொழியை நிறைவேற்றினார். இதையடுத்து 2020 ஜனவரி 31ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது.
காரணம் 1: கன்சர்வேடிவ் கட்சியின் சரிவு இதன் பின்னரே ஆரம்பித்தது. அவரது ஆட்சியில் பல ஊழல் புகார்கள் வெடித்தது. மேலும், அவர் தனக்கு ஆதரவான நபர்களுக்கு மட்டும் முக்கிய பதவிகள் வழங்கி பாரபட்சம் காட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன. இப்படிப் பல சர்ச்சைகள் எழுந்த போதிலும் அவர் தனது பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். ஆனால், கொரோனா சமயத்தில் நாடே லாக்டவுனில் இருந்த போது போரிஸ் ஜான்சன் தனது சகாக்களுக்கு கொடுத்த பார்டி மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதை பார்டிகேட் என்றே அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன.
கொரோனா கட்டுப்பாடுகளால் பிரிட்டன் மகாராணியாக இருந்த ராணி எலிசபெத் கணவர் இளவரசர் பிலிப் மரணத்திற்குக் கூட யாரும் அனுமதிக்கப்படவில்லை. ராணி எலிசபெத் மட்டுமே அருகே அமர்ந்திருந்தார். இப்படியொரு நேரத்தில் போரிஸ் ஜான்சான் ஜாலியாக பார்ட்டி வைத்தது மிகப் பெரிய சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு அதிகமாக இருந்த நிலையில், அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. இது முதல் அடி.
காரணம் 2: அடுத்து பிரதமராகப் பதவியேற்றவர் லிஸ் டிரஸ்.. வெறும் 49 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தாலும் இவர் செய்த செயலை அந்நாட்டு மக்கள் மறக்கவே மாட்டார்கள். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பிரிட்டன் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருந்த சூழலில் திடீரென வரிகளைக் குறைப்பதாக அறிவித்தார் லிஸ் டிரஸ்.. இது சர்வதேச அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. சர்வதேச நாணய நிதியம் பிரிட்டன் அரசை வெளிப்படையாகவே கண்டித்தது. அந்தளவுக்கு நிலைமை மோசமானது. பிரிட்டன் மக்களின் செலவுகள் உயர்ந்தன. இதுவே காரணம். இதுவே காரணம் 2..
இதன் பின்னரே ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ரிஷி சுனக் காலத்தில் பிரிட்டின் பொருளாதாரம் மீண்டுள்ளது. விலைவாசி சற்று கட்டுக்குள் வந்துள்ளது. பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. பிரிட்டன் ஜிபிடி மந்தநிலையில் இருந்து வெளியேறி பாசிட்டிவ் வளர்ச்சியை நோக்கித் திரும்பியது. இருப்பினும், இவை எல்லாம் ரொம்பவே லேட்.. இதற்கு முன்பு இருந்த இரு பிரதமர்கள் ஏற்கனவே கன்சர்வேடிவ் கட்சிக்கான தோல்வியின் பாதையில் தள்ளிவிட்டனர். இதனால் ரிஷி சுனக்கால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை.
காரணம் 3: மேலும், அங்குள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாது. எனவே, அவர்கள் அந்நாட்டு அரசின் தேசிய மருத்துவ சேவைகள் என்ற அமைப்பில் தான் சிகிச்சை பெறுவார்கள். அதில் காத்திருப்பு காலம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. அந்த அமைப்பிற்கு போதிய பட்ஜெட் இல்லாததால் ஒரு சிறு ஆப்ரேஷனுக்கு கூட மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது பிரிட்டன் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
காரணம் 4: அதேநேரம் சுனக் மீதும் சில தவறுகள் உள்ளன. பொருளாதார சிக்கல்களில் இருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப அவர் சட்டவிரோதக் குடியேற்றப் பிரச்சினை குறித்துப் பேசினார். குறிப்பாக நாட்டில் ஏற்கனவே சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை ருவாண்டாவிற்கு அனுப்ப உள்ளதாக அறிவித்ததும் கடும் எதிர்ப்பை கிளப்பியது. இவை எல்லாம் சேர்த்தே ரிஷி சுனக் கட்சிக்குப் படுதோல்வியைப் பெற்றுத் தந்தது.












Click it and Unblock the Notifications