ராணி எலிசபெத் மறைவு.. காரணம் என்ன? உண்மையில் உயிரிழந்தது எப்போது? இறப்பு சான்றிதழில் பரபர தகவல்கள்
லண்டன்: ராணி எலிசபெத் மறைந்து சுமார் இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் ராணியாக இருந்தவர் மறைந்த ராணி எலிசபெத். இவர் கடந்த 1952 முதல் சுமார் 60 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்து உள்ளார்.
அந்நாட்டின் வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத் தான். அவருக்கு வயது 96 ஆகும்.

ராணி எலிசபெத்
பிரிட்டன் மட்டுமின்றி உலகெங்கும் பிரிட்டன் ராணி எலிசபெத்திற்கும் அரசு குடும்பத்திற்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே அவர் ஸ்காட்லாந்து அரண்மனையில் ஓய்வெடுத்து வந்தார். இதன் காரணமாகவே லிஸ் டிரஸை பிரிட்டன் பிரதமராக அறிவிக்கும் நிகழ்வு கூட ஸ்காட்லாந்திலேயே நடந்தது. பொதுவாக இந்த நிகழ்வு லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி
இந்தச் சூழலில் தான் கடந்த செப். 8ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. அரசு குடும்ப உறுப்பினர்கள் ஸ்காட்லாந்து அரண்மனை விரைந்த நிலையில், அவர் காலமானார். அவரது மறைவு பிரிட்டன் மக்களிடையே மட்டுமின்றி உலகெங்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ராணி எலிசபெத் உடலுக்கு 10 நாட்கள் அரசு முறையில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

இறுதிச்சடங்கு
பொதுமக்கள் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்திய நிலையில், கடந்த செப்.19இல் இறுதிச்சடங்குகள் நடந்தன. வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு ராணியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு மதச் சடங்குகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து வின்ட்சர் கோட்டைக்கு ராணி எலிசபெத் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. முதலில் ராணியின் உடல் அங்குள்ள ராயல் வாலட்டில் இறக்கப்பட்டது.

நல்லடக்கம்
இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் மட்டும் சுமார் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ராணியின் உடல் நல்லடக்கம் செய்யும் நிகழ்வு தனியாக நடைபெற்றது. அதில் பொதுமக்கள், ஊடகங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அரசு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அப்போது கிங் ஜார்ஜ் நினைவு சேப்பலில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழந்தது எப்போது
அவரது கணவர் பிலிப்பின் உடலும் ராயல் வால்ட்டில் இருந்து ராணியின் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் ராணி எலிசபெத்தின் இறப்பு சான்றிதழ் இப்போது வெளியாகி உள்ளது. அதில் ராணி எலிசபெத் பிரிட்டன் நேரப்படி பகல் 3.10 மணிக்கு (இந்திய நேரப்படி 7.40 மணிக்கு) உயிரிழந்ததாகக் கூறப்பட்டு உள்ளது. அவர் உயிரிழந்த 3.30 மணி நேரத்திற்குப் பின்னரே அவரது மறைவு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்
மேலும், உயிரிழந்ததற்கான காரணத்தில் "வயது மூப்பு" காரணமாகவே அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாகவே ராணி எலிசபெத் வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல்நிலை சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு இருந்தார். குறிப்பாக, கடந்த ஆண்டு இறுதி முதலே அவரால் நீண்ட நேரம் நிற்கவும் நடக்கவும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications