உலகின் முதன் முறையாக.. சிறுவனின் மூளையில் வலிப்பு நோய் கட்டுப்பாட்டு கருவி பொருத்தம்! மருத்துவ சாதனை
லண்டன்: உலகில் முதன் முறையாக பிரிட்டனை சேர்ந்த சிறுவன் ஒருவருக்கு மூளையில் வலிப்பு நோய் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கருவி பொருத்தப்பட்ட பின்னர் சிறுவன் முன்பை விட இப்போது பயங்கர ஆக்டிவாக இருப்பதாக பெற்றோர் கூறியுள்ளனர்.
மருத்துவ துறைக்கு மிகவும் சவாலாக இருந்த விஷயம் வலிப்பு நோய். காரணம் இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்த தற்போது வரை மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால்.. இந்த நோயின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க தற்போது புதிய கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் அறிமுகம் செய்திருக்கிறது. பிரிட்டனில், வலிப்பு நோயால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வந்த சிறுவனுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு நிரந்தரமான தீர்வை வழங்கியுள்ளது.

பிரிட்டனின் சோமர்செட் பகுதியை சேர்ந்த தம்பதியின் 13 வயது மகன்தான் ஓரான் நால்சன். இச்சிறுவனுக்கு சிறு வயதிலிருந்து வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு 100க்கும் அதிகமான முறை வலிப்பு நோய் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சிறுவனின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நால்சனின் வயதை ஒட்டிய மற்ற சிறுவர்களை போல நால்சனால் ஓடியாடி விளையாட முடியாது. எப்போதும் படுக்கையிலேயேதான் இருந்து வந்திருக்கிறார்.
சில நேரங்களில் இந்த வலிப்பு தீவிரமாக இருக்கும். கண்கள் மேலிழுக்க, கை கால்கள் என எல்லாவற்றிலும் நரம்பு புடைக்கும் கோர காட்சியை பெற்றோர்களால் பார்க்கவே முடியவில்லை. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பெற்றோர் தீவிர முயற்சியை மேற்கொண்டனர். இப்படியாக லண்டன் பல்கலைக்கழக கல்லூரி, கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறுவன் நால்சனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
சிறுவனின் தலையில் உள்ள மண்டை ஓட்டின் சிறு பகுதியை கட் செய்து எடுத்து, மூளையில் 3.5 செமீ சதுரமும் 0.6 செமீ தடிமனும் கொண்ட வலிப்பு நோய் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. பின்னர் கட் செய்து எடுக்கப்பட்ட மண்டை ஓடு ஸ்குரூ உதவியுடன் மீண்டும் பொருத்தப்பட்டிருக்கிறது. சிறுவனுக்கு தலையில் வலிப்பு நோய் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படுவது உலகில் இதுவே முதன் முறையாகும்.
இந்த கருவியை ரீச்சார்ஜ் செய்ய, காதில் மாட்டிக்கொள்ளும் ஹெட்போன் போன்ற மற்றொரு கருவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தலையில் பொருத்தப்பட்டுள்ள வலிப்பு நோய் கட்டுப்பாட்டுக்கருவி, மூளைக்கு லேசான மின்தூண்டலை கொடுத்து அதன் மூலம் வலிப்பு நோயை 80% கட்டுப்படுத்துகிறது. இது குறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில்,
"நால்சனுக்கு வலிப்பு ஏற்படாத நாளே கிடையாது. ஒரு நாளில் பலமுறை அவன் வலிப்பு நோயால் வேதனைப்படுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவனுக்கு 13 வயதாகிறது. அவன் ஒரு டீன்ஏஜ் பையன். ஆனால், மற்ற சிறார்களை போல அவனால் விளையாட முடியவில்லை என்பதை நினைக்கும்போது எங்களுக்கு வருத்தமாக இருந்தது. இப்போது இந்த பிரச்னை சரி செய்யப்பட்டிருக்கிறது. அவன் குதிரையேற்றம் உள்ளிட்ட கடினமான விளையாட்டுகளை கூட அவனால் விளையாட முடிகிறது" என்று கூறியுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை அறிவியல் உலகில் மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் இந்த கருவியை பயன்படுத்த முடியும் என்பது மிகப்பெரிய நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications