அதிரவைக்கும் மெகா மோசடி.. பாஜக MLA நடத்தி வைத்த திருமணத்தில் 200+ ஜோடிகள் போலி.. விசாரணையில் ஷாக்!
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் அரசின் உதவித்தொகையை அபகரிப்பதற்காக போலியாக ஜோடிகளை நிற்க வைத்து போலி திருமணம் நடத்திய விவகாரத்தில் 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் உள்ள மணியா என்ற இடத்தில் கடந்த வாரம் ஒரே இடத்தில் 568 ஜோடிகளுக்கு திருமண நிகழ்வு, பாஜக எம்.எல்.ஏ கேட்கி சிங் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டு திருமண நிகழ்வில் திருமணம் செய்துகொள்ளும் ஏழைப் பெண்களுக்கு ரூ35 ஆயிரம் பணம், ரூபாய் 65 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். அதன்படி நடைபெற்ற திருமணத்தில் மிகப்பெரிய மோசடி அரங்கேறியுள்ளது.

பலியா பகுதியில் ஒரே இடத்தில் 568 ஜோடிகளுக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணம் செய்வதற்குப் போதிய பெண்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட பெண்களையும், அவர்களது கணவர்களையும் அழைத்து வந்து, அவர்களை மீண்டும் மணமக்களாக நிறுத்தினர்.
மேலும், ஏராளமான பெண்கள் ஜோடி இன்றி தனியாக நின்றனர். அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மாலையை, தாங்களே அணிந்துகொண்டனர். சிலர் திருமண நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். அந்தப் பெண்களிடமும், இளைஞர்களிடமும் பண ஆசை காட்டி, அவர்களையும் மணமக்களாக நிறுத்தினர்.
அவர்கள் அங்கு உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளாமல், வெறுமனே மாலையுடன் முன்பின் தெரியாத பெண்ணுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தங்களுக்குத் தாங்களே மாலையை அணிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு, அங்கிருந்து தனித்தனியாக கலைந்து சென்றனர்.
588 ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடந்தது போல புகைப்படத்தைக் காட்டி அரசிடம் பணம் பெற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்தப் போலி திருமணத்தை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த மோசடி அம்பலமானது.
இதையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அரசு உதவித்தொகையை அபகரிப்பதற்காக முறைகேட்டில் ஈடுபட்ட 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Marriage scam in Ballia Uttar Pradesh.
— Avinash K S🇮🇳 (@AvinashKS14) January 31, 2024
A mass marriage held by the Chief Minister in Maniyar, Ballia district of UP on January 25th has been revealed to have been rigged.
A 20-member investigation team has been constituted to investigate those ineligible for the mass marriage, pic.twitter.com/gO1HeYkln1
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடி குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணம் நடத்தி வைக்கப்பட்டவர்களில் சுமார் 200க்கும் அதிகமான ஜோடிகள் போலியானவை என்றும், போலியாக மணப்பெண், மணமகனை ரூ.500 முதல் 2000 வரை கொடுத்து நிற்க வைத்ததும், இந்த மோசடி மூலம் ரூ. 2 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications