விவசாயிகள் போராட்டம்: அமைச்சர் மகன் ஆஷிஷ் எங்கே?.. நண்பர்கள் இருவர் கைது!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மத்திய அமைச்சரின் மகனின் கார் ஏற்றியது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு டெல்லி, உ.பி., ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசுடன் விவசாயச் சங்கங்கள் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.

இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லி எல்லைகள் மட்டுமல்லாது பல விவசாயிகள் ஹரியானா, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் மாநில பாஜக தலைவர்களின் வாகனங்கள் வழிமறித்து அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டி தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
இந்த போராட்டத்தின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் காருக்கும் விவசாயிகள் கருப்புக் கொடியை காட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாஜகவினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் விவசாயிகள், பத்திரிகையாளர்கள் என மொத்தம் 8 பேர் பலியாகிவிட்டனர்.
ஆனால் அமைச்சரின் மகனோ சம்பவம் நடந்த போது தான் அந்த காரில் இல்லை, வேறு ஒரு நிகழ்ச்சியில் இருந்ததாக விளக்கமளித்தார். மேலும் தனது டிரைவரை போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கிவிட்டு காரையும் கொளுத்தியதாக கூறியிருந்தார். ஆனால் விவசாயிகளோ ஆஷிஷும் காரில் இருந்ததாக குற்றம்சாட்டுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக எத்தனை பேரை போலீஸார் கைது செய்தனர் என்பது குறித்து உத்தரப்பிரதேச அரசு ஒரு நாளுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆஷிஷுக்கு நெருக்கமான லவகுசா ராணா, ஆஷிஷ் பாண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எனினும் அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை எங்கிருக்கிறார் என தெரியவில்லை. ஆஷிஷை கைது செய்ய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வலியுறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications