சீட்டு கட்டுகளை போல சரிந்த பில்டிங்! அதிகாலையில் உ.பியில் கோர விபத்து.. 2 பேர் பலி! 10 பேர் மீட்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இருப்பினும் 3-4 பேர் வரை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என மீட்பு படையினர் கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கயில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதிகாலை 3 மணியளவில் கட்டிடம் சீட்டு கட்டு சரிவதை போல விழுந்திருக்கிறது. பலத்த சத்தம் கேட்டு விழித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கும், மீட்பு படையினருக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் 10 பேரை மீட்டுள்ளனர். இவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல 2 பேரின் சடலங்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து பாரபங்கி காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் கூறுகையில், "அதிகாலை விபத்து ஏற்பட்டிருக்கிறது. முதலில் எங்களுக்குதான் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் நாங்கள் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தோம். தற்போது மாநில மீட்பு படையினர் மற்றும் தேசிய மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் 4 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது" என்று கூறியுள்ளார். அதிகாலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications