ஏபிவிபி தொண்டர்கள் பொய் புகார். ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட 2 கன்னியாஸ்திரிகள்.. நடந்தது என்ன?
லக்னோ: உத்தரபிரதேசத்தில் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் இரண்டு கன்னியாஸ்திரிகள் ஓடும் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.
கன்னியாஸ்திரிகள் மீது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின்(ஏபிவிபி) தொண்டர்கள் கொடுத்தது பொய் புகார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

கன்னியாஸ்திரிகளுக்கு நடந்த கொடுமை
கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் இரண்டு பெண்கள், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசாவின் ரூர்கேலாவுக்கு சென்று கொண்டிருந்தனர். அதே ரயிலின் மற்றொரு பெட்டியில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின்(ஏபிவிபி) சில தொண்டர்கள் ஜான்சிக்கு சென்று கொண்டிருந்தனர். ரயிலின் ஏறியதில் இருந்து ஏபிவிபி தொண்டர்கள் அந்த இரண்டு கன்னியாஸ்திரிகளிடம் மத ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டனர்
''இவர்கள் இரண்டு பெரும் மற்ற இரு பெண்களையும் மதமாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர்'' என்று ஏபிவிபி தொண்டர்கள் ரயில்வே ஹெல்ப் லைனிலும், ஆர்.பி.எஃப் போலீசாருக்கும் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து இரண்டு கன்னியாஸ்திரிகள் உள்பட 4 பேரும் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டனர். அங்கு நான்கு பேரிடமும் விசாரணை நடத்தியபோது அந்த 2 பெண்களும் பிறப்பில் இருந்தே கிறிஸ்தவர்கள் என்பதும் ஏபிவிபி தொண்டர்கள் கூறிய குற்றச்சாட்டு பொய் என்பதும், ஏபிவிபி தொண்டர்கள்தான் கன்னியாஸ்திரிகளை மதரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்தது.

பினராயி விஜயன் கண்டனம்
இதனை தொடர்ந்து கன்னியாஸ்திரிகள் உள்பட 4 பேரும் வேறு ஒரு ரயிலில் ரூர்கேலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளது. இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் ''இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் மதிப்பையும், மத சகிப்புத்தன்மையின் பண்டைய பாரம்பரியத்தையும் களங்கப்படுத்துகின்றன'' என்று கூறினார்.

ஆதார் அட்டை வாங்கி விசாரிக்கின்றனர்
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பிரசாரத்துக்கு வந்த அமித்ஷா இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் விவகாரம் தொடர்புடைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரயிலில் இருக்கும் கன்னியாஸ்திரிகளிடம் ரயில்வே ஊழியர்கள் மற்றும் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களுடன் இருந்த பெண்களின் ஆதார் அட்டையை வாங்கி விசாரிக்கின்றனர். தான் ஒரு கிறிஸ்தவ பெண் என்றும் கன்னியாஸ்திரியாக மாற தயாராகி வருவதாகவும் அந்த பெண் தெரிவிக்கிறார்.

மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள்
அப்போது அங்கு இருக்கும் ஏபிவிபி தொண்டர் ஒருவர் இவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்கிறார். ''நாங்கள் இந்து சமுதாயத்துக்காகவும் உழைக்கிறோம்... நாங்கள் ஒரு இந்து அமைப்பிற்காக உழைக்கிறோம்'' என்று வேறு ஒருவர் கூறுவது போலவும் வீடியோ அமைந்துள்ளது. இதேபோல் ஜான்சி ரயில் நிலையத்தில் அந்த கன்னியாஸ்திரிகளிடம் விசாரிப்பது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications