நகரங்களுடன் கிராமங்களை இணைக்க புதிய திட்டம்.. முழுவீச்சில் இறங்கிய அதிகாரிகள்! கலக்கும் உ.பி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கிராமப்புறங்களிலிருந்து மாவட்ட தலைநகரங்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் கிராமப்புறங்களிலிருந்து மாவட்ட தலைநகரங்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

வளர்ச்சி திட்டங்கள் குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், "பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் திட்டத்தின் கீழ் , உத்தரப்பிரதேச அரசு மாநிலத்தில் 29 மாவட்டங்களில் 407 வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மொத்த ஒதுக்கீடான ரூ.198.93 கோடியில் ரூ.153.17 கோடிக்கு முதற்கட்ட நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் விரிவாக பேசுகையில்,
"உத்தரப் பிரதேசத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடன் மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளை மேம்படுத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இதன் முக்கிய நோக்கமே கிராமங்களை நகரங்களுடன் இணைப்பதுதான். ஏற்கெனவே போதுமான அளவில் இந்த இணைப்பு சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த சாலைகளில் சில மிகவும் பழுதடைந்துள்ளன. எனவே இதனை சீரமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக வகுக்கப்பட்ட செயல்திட்டத்தின்படி பொதுப்பணித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில் கோண்டா, பஹ்ரைச், சுல்தான்பூர், அமேதி, அயோத்தி, ஜான்பூர் , பல்லியா, பிரதாப்கர், மதுரா, லக்கிம்பூர் கெரி, சீதாப்பூர், ஹர்தோய் மற்றும் வாரணாசி போன்ற மாவட்டங்களில் இந்த இணைப்பு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி மேலும் வேகமடையும்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications