ரூ.130 கோடியில் அயோத்தியில் அமையும் சுற்றுலா மையம்! உ.பியின் புதிய அடையாளம் என யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ரூ.130 கோடியில் சுற்றுலா மையத்தை உருவாக்குகிறது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு. இதன் மூலம் அயோத்தி புதிய பரிணாமத்தை அடையும் என யோகி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் அயோத்தியை மேலும் தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற்றும் வகையில் ரூ.130 கோடியில் புதிய திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "அயோத்தியில் உலக தரம் வாய்ந்த சுற்றுலா மையத்தை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். சுமார் 4.40 ஏக்கர் அளவில் ரூ.130 கோடியில் இது உருவாக்கப்பட இருக்கிறது. விரிவாக கூறுவதெனில், சுற்றுலா அலுவலகம், பயணிகள் தங்குமிடம், கலை மற்றும் கைவினை மையம், உணவு கடைகள், ஷாப்பிங் மார்ட் மற்றும் பார்க்கிங் இடம் போன்றவை உருவாக்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும்.
திட்டம் வடிவமைக்கப்பட்டபோதே, அதை மாநில சுற்றுலாத்துறையும், தனியாரும் இணைந்துதான் உருவாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. தற்போது அதன்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றுலா மையம் பயன்பாட்டுக்கு வந்தால் அது உத்தரப் பிரதேசத்தின் புதிய அடையாளமாக மாறும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட நாங்கள் அனைவரும் நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications