மனிதாபிமானமே இல்லாமல்.. நோயாளியை தள்ளிவிட்டு.. ஆம்புலன்ஸில் மனைவி பலாத்காரம்.. உ.பி.யில் கொடூரம்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், காஸிபூர் பகுதியில் ஆம்புலன்ஸில் இருந்து நோயாளியை வெளியே தள்ளிவிட்டு விட்டு அவரது மனைவியை ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், உதவியாளரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பெண்ணின் கணவரின் சுவாச கருவியையும் அந்த கொடூரர்கள் பிடுங்கியதால் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்பட்டுள்ளது. வீடு, பள்ளி, மருத்துவமனை என அனைத்துப் பகுதிகளும் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறிவிட்டன. நாட்டில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் வீட்டுக்கு திரும்புவதற்காக ஆம்புலன்ஸில் வந்த நிலையில், நோயாளியை கீழே தள்ளிவிட்டு அவரது மனைவியை ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், உதவியாளரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள கோடூர சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், காஸிபூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்த நிலையில், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது மனைவி வாடகை ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள தங்களது வீட்டுக்கு ஆம்புலன்ஸில் சென்றுள்ளனர். அப்போது, ஆம்புலன்ஸை நடுவழியிலேயே ஓட்டுநர் நிறுத்திவிட்டு, நோயாளியின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
இதையடுத்து, சப்தம் போட்ட நோயாளியை ஆம்புலன்ஸில் இருந்து வெளியே தள்ளியதோடு, அவரது சுவாசக் கருவிகளையும் பிடுங்கியுள்ளனர். மேலும், அப்பெண்ணுடன் வந்திருந்த சிறுவனையும் பிடித்து வைத்துவிட்டு, அப்பெண்ணை ஓட்டுநரும், உதவியாளரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்கு எங்களிடம் பணம் இல்லாததால் கணவரை வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்தோம். மருத்துவமனையில்தான் இந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தொடர்பு எண்ணைக் கொடுத்தனர்.
ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆம்புலன்ஸில் வந்தபோது ஓட்டுநர் என்னை முன்பக்கத்தில் அமர வற்புறுத்தினார். கணவருடன் எனது சகோதரர் பின்னால் அமர்ந்து கொண்டார். இந்நிலையில், ஓட்டுநரும், உதவியாளரும் என்னை வன்கொடுமை செய்தனர். நான் அவர்களைத் தடுத்து சப்தம் போட்டதையடுத்து கணவரும், சகோதரும் சப்தம் போட்டனர்.
அப்போது, ஆம்புலன்ஸில் இருந்து எனது கணவரை தள்விட்டு, அவருக்கு கொடுத்த சுவாசக் கருவியை பிடுங்கினர். தப்பிக்க முயன்ற நிலையில் என்னை வன்கொடுமை செய்தனர். மேலும், என்னிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம், தாலி, கொலுசு போன்றவற்றையும் பறித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து, போலீஸில் புகார் செய்துவிட்டு, கணவரை உடனடியாக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு, அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications