நொய்டாவில் செயல்பாட்டுக்கு வரும் விமான உதிரி பாகங்கள் உற்பத்தி மையம்! அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தை விமானப் போக்குவரத்துத் துறையின் மையமாக மாற்றும் வகையில் நொய்டாவில் விமான உதிரி பாகங்கள் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தை விமானப் போக்குவரத்துத் துறையின் மையமாக மாற்றும் வகையில் நொய்டாவில் விமான உதிரி பாகங்கள் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நகர்வை துரிதப்படுத்தும் விதமாக தற்போது விமான உதிரி பாகங்கள் உற்பத்தி மையம் நொய்டாவில் அமைய இருக்கிறது. சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்த உற்பத்தி மையம் ஏராளமானோருக்கு வேலையை வழங்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த உற்பத்தி மையம் இந்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து பேசிய அதிகாரிகள், "இத்திட்டத்தின் கீழ், விமானத்தின் உதிரி பாகங்கள் மற்றும் முழு விமானங்களுக்கான அசெம்பிளிங் மற்றும் உற்பத்தி அலகுகள் நிறுவப்படும். இந்திய நிறுவனங்களுடன், அமெரிக்கா உட்பட பல வெளிநாட்டு நிறுவனங்களும் தங்கள் யூனிட்களை அமைக்க ஆர்வமாக இருக்கின்றன. இதுவரை இந்தியா தனது விமானங்களை வெளிநாட்டில்தான் பழுது பார்த்து வருகிறது. ஆனால் இந்த உற்பத்தி மையம் அமைவதன் மூலம் இனி நம்முடைய விமானங்களை மட்டுமல்லாது மற்ற நாடுகளின் விமானங்களையும் நம்மால் பழுது பார்த்து பராமரிக்க முடியும். இது உ.பியின் பொருளாதாரத்தை மேலும் உயர்த்தும்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications