மரண பயம் தரும் ரயில்கள்.. உபியில் மீண்டும் ரயில் விபத்து! 2 பெட்டிகள் கவிழ்ந்ததால் பதைபதைத்த பயணிகள்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் வரை இயக்கப்படும் ரயில் சுஹைல்தேவ் எக்ஸ்பிரஸ். இந்த ரயில் நேற்று இரவு ஏராளமான பயணிகளுடன் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. 6 வது நடைமேடைக்கு வந்த அந்த ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சிக்னல் வந்தவுடன் புறப்பட முயன்றது. அப்போது திடீரென ரயில் எஞ்சினின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டே விலகி சென்றன. இதன் காரணமாக ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.

இதுகுறித்து வடக்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ஹிமான்சு சேகர் தெரிவிக்கையில், "ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தொடங்கிய ரயிலுடைய எஞ்சினின் 2 சக்கரங்கள் விலகி சென்றன. அதன் காரணமாக எஞ்சினுக்கு பின்னால் இருந்த 2 ரயில் பெட்டிகளும் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ஆனால், எந்த விதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. அந்த வழித் தடத்தில் அனைத்து ரயில் சேவைகளும் சீராக உள்ளன.
இரவு 9 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது. ஆனால், சில மணி நேரங்களிலேயே அது சரி செய்யப்பட்டு புறப்பட்டது. ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்." என்றார். கடந்த 3 நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்ற பயணிகள் ரயில் விஜயநகரம் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 6 பயணிகள் உயிரிழந்தனர். 8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அதேபோல் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பதாய் ரயில் நிலையத்தில் சென்று கொண்டு இருந்த பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் சியோனி ரயில் நிலையம் இடையே இயக்கப்படும் பாதால்கோட் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 2 ரயில் பெட்டிகள் முழுமையாக தீயில் கருகி நாசமாகின. இந்த நிலையில் மீண்டும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications