20 அடி கிணற்றில் அழுகுரல்.. பச்சிளம் குழந்தையை சுற்றியிருந்த 'நாகராஜா'! அடுத்து நடந்த சுவாரசியம்
குழந்தையை நாகராஜாதான் காப்பாற்றியதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று 20 அடி கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இதில் சுவாரசியம் என்னவெனில் குழந்தைக்கு பாதுகாப்பாக அதன் அருகில் பாம்பு ஒன்றும் இருந்திருக்கிறது என்பதுதான்.
சாம்பல் மாவட்டத்தின் ஃபைஸ்கஞ்ச் பெஹ்தா பகுதியில் உள்ள பசௌனி கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கிராமத்தில் பிரேம் ராஜ்-சோமவதி தேவி தம்பதியினருக்கு சொந்தமான நிலத்திற்கு அருகில் சிறிய கிணறு ஒன்று இருந்திருக்கிறது. இந்த கிணற்றிலிருந்து நீண்ட நேரமாக அழுகுரல் கேட்டிருக்கிறது. இதனை கேட்ட பிரேம் ராஜ் பூனையின் குரல் என்று கண்டுக்கொள்ளாமல் விட்டிருக்கிறார்.
ஆனால் சோமவதி தேவி சந்தேகமடைந்து கிணற்றை எட்டிப்பார்க்கையில் உள்ளே ஒரு பச்சிளம் குழந்தை அழுதுக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். பின்னர் கணவரை அழைத்து குழந்தையை மீட்க முயன்றபோதுதான் குழந்தை அருகே ஒரு பாம்பு இருப்பது தெரிந்திருக்கிறது.. காப்பாற்ற சென்றால் பாம்பு குழந்தையை ஏதாவது செய்துவிடும், மற்றொருபுறம் கிணற்றில் நீர் இல்லாததால் அவசரப்படாமல் குழந்தையை காப்பாற்றலாம் என்றும் காத்திருந்தனர்.

மீட்பு
பின்னர் உதவிக்கு அக்கம் பக்கத்தினர் வந்த நிலையில், ஆட்களை கண்டு பாம்பு அங்கிருந்து சென்றுவிட்டது. பாம்பு சென்றதை அறிந்துக்கொண்ட பிரேம் ராஜ் கிணற்றில் இறங்கி குழந்தையை காப்பாற்றினார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் குழந்தையை மீட்டு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனையில் குழந்தைக்கு பெரிய அளவில் எந்த அடியும் படவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சிகிச்சை
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, "குழந்தைக்கு சில சிராய்ப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. 20 அடி உயரத்திலிருந்து கிணற்றில் விழுந்த குழந்தைக்கு மிக குறைந்த அளவில் அடிப்பட்டிருப்பது அதிசயமாக இருக்கிறது. தலையில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதில் பயப்படும்படி எதுவும் இல்லை. குழந்தை நிச்சயமாக உயிர் பிழைத்துவிடும்" என்று கூறியுள்ளனர். காவல்துறை தரப்பில், "பிரேம் ராஜ் கொடுத்த தகவலின் பேரில் குழந்தை மீட்கப்பட்டிருக்கிறது. குழந்தையின் தொப்புள் கொடி கூட முழுமையாக வெட்டப்படவில்லை என்பதால் பிறந்து சில மணி நேரங்கள்தான் ஆகியிருக்கும் என்று நினைக்கிறோம்.

காவல்துறை
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இதற்கான மருத்துவ செலவுகளை பிரேம் ராஜ் தம்பதியினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏன் குழந்தை கிணற்றில் வீசப்பட்டது? யார் இதை செய்தது என்று தீவிர விசாரணை மேற்கொண்டு பெற்றோரை தேடி வருகிறோம். 72 மணி நேரத்திற்குள் பெற்றோர் கண்டுபிடிக்கப்படவில்லையெனில் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பால் வழக்குப்பதிவு செய்யப்படும். தற்போது குழந்தைக்கு ஸ்கேன் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனையடுத்து குழந்தை மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்படும்" என்று கூறியுள்ளனர்.

நாகராஜா
இச்சம்பவம் குறித்து ஊர் மக்கள் கூறுகையில், "கிணறு வறண்டு கிடக்கிறது. இதில் குழந்தை விழுந்தால் நிச்சயம் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்காது. ஆனால் இக்குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்திருக்கிறது. 'இதற்கு நாகராஜாதான் காரணம்'. பாம்பு வடிவில் வந்த அவர்தான் இக்குழந்தையை காப்பாற்றியிருக்கிறார். எனவே இது ஒரு அதிசய குழந்தை" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications