அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. மது விற்பனைக்கு தடை! பாஜக ஆளும் மாநிலங்களில் அதிரடி உத்தரவு
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் அன்றைய தினம் பாஜக ஆளும் மாநிலங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்தப்படும் நாளில், பாஜக ஆளும் மாநிலங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில்தான் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும், ஜனவரி 22-ம் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய், கடந்த வாரம் அறிவித்திருந்தார். சாதாரண மதுக்கடை தொடங்கி, பப்கள் வரை அன்றைய தினம் எங்கும் மது விற்பனை செய்யப்படாது.
சத்தீஸ்கர் மாநிலத்தை தொடர்ந்து அசாமில், ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா, "ராமர் கோயில் திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில், ஜனவரி 22 ஆம் தேதி மாநிலத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.
பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார். மட்டுமல்லாது அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications