"வேலையில்லாத இளைஞர்கள் குறி.." ஏடிஎம் கொள்ளை எப்படி.. 3 மாத கிராஷ் கோர்ஸ் வேறு! நேஷனல் கேங் பகீர்
லக்னோ: பீகார் மாநிலத்தில் ஒரு சாதாரண ஏடிஎம் கொள்ளை சம்பவத்தை விசாரிக்கச் சென்ற போலீசாருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. இது அவர்களை ஒரு நிமிடம் ஸ்டன் ஆக்கிவிட்டதாம்.
இப்போது இந்தியாவில் ஏகப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். இந்தியர்களால் புதிய நிறுவனங்களை உருவாக்க முடியாது என்பதை மாற்றும் வகையில் இவர்கள் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர்.
இந்தியாவின் தொழில்துறையை இதுபோன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பீகார்: இதனிடையே பீகாரில் மிக வித்தியாசமான ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஒருவர் நடத்தி வருகிறார். வேலையில்லாத இளைஞர்களுக்கு அவர் கோச்சிங் நடத்தி வந்தாராம். அவரை தான் இப்போது போலீசார் அப்படியே தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர். ஸ்டார்ட்அப் நடத்தி கோச்சிங் சென்டர் நடத்தினால் எல்லாம் போலீஸ் கைது செய்வார்களா என நீங்கள் கேட்கலாம். அவர் என்ன செய்தார் என்று பார்த்தால் உங்களுக்கே அவரை ஏன் கைது செய்துள்ளார்கள் என்பது புரியும்.
பீகாரின் சாப்ராவைச் சேர்ந்த சுதிர் மிஸ்ரா என்பவர் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.. அங்கே வேலை இல்லாத இளைஞர்களுக்கு 15 நிமிடங்களில் ஏடிஎம்களை உடைப்பது எப்படி என்று பயிற்சி அளித்துள்ளார்.. இவரைத் தான் இப்போது உபி போலீசார் அப்படியே தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர்.

ஏடிஎம் கொள்ளை: உத்தரப் பிரதேசத்தின் லக்னோவின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இருந்து ரூ.39.58 லட்சம் சமீபத்தில் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9.13 லட்சம் கைப்பற்றப்பட்டது. அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தான் சுதிர் மிஸ்ரா பற்றித் தெரிய வந்துள்ளது. சுதிர் மிஸ்ரா தேசிய அளவில் ஒரு கேங்கை வைத்து நடத்தி வருகிறார்.
39 லட்சம் திருடப்பட்ட சம்பவத்தில் போலீசார் சுமார் 1,000 சிசிடிவி காட்சிகள், மொபைல் டேட்டாக்களை வைத்து ஆய்வு செய்துள்ளனர். அங்கே இருக்கும் 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தான் போலீசாரால் குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்தது.
விசாரணை: இது குறித்து போலீசார் கூறுகையில், "ஏடிஎம் அருகே உள்ள வீட்டில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நீல நிற காரை பார்த்தனர். அதைத் தான் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர்" என்றனர். ஒரு பக்கம் போலீசார், காரின் உரிமையாளரை கண்டறிந்து அங்கே சென்றுள்ளனர். அதேநேரம் மற்றொரு புறம் சுல்தான்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து அந்த 4 பேரை உபி போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் கைது செய்தவர்களில் ஒருவரான நீரஜ், கும்பலில் நிரந்தர உறுப்பினர் என்றும், அவர் மீது 5 வழக்குகள் இருப்பதாகவும், போலீசார் தெரிவித்தனர். இந்த நீரஜ் ஏடிஎம் கொள்ளை நுட்பங்களை சுதிர் மிஸ்ராவிடம் இருந்து தான் கற்றுள்ளார். மிஸ்ரா இதற்காக தேசியளவில் ஒரு கேங் நடத்தி வருகிறாராம். பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலையில்லாத இளைஞர்களை ஏடிஎம் கொள்ளையில் வேலைக்கு அமர்த்துவதே இவரின் முக்கிய வேலை.

15 நிமிடங்கள்: இது குறித்து போலீசார் கூறுகையில், "இந்த இளைஞர்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பீகாருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கே வைத்து மூன்று மாத க்ராஷ் கோர்ஸ் போல ஏடிஎம் கொள்ளை குறித்து பாடம் எடுத்துள்ளனர். எப்படி ஏடிஎம்மில் விரைவாக நுழைவது, கண்ணாடிகளில் எப்படி ஸ்ப்ரே செய்ய வேண்டும்.. பணப் பெட்டியை தனியாக எடுப்பது என அனைத்தையும் எப்படி வெறும் 15 நிமிடங்களில் செய்ய வேண்டும் என்பதை மிஸ்ரா இவர்களுக்குச் சொல்லித் தருகிறார்" என்றனர்.
3 மாத பயிற்சிக்குப் பின், ஒரு ஏடிஎம் இயந்திரத்தை வைத்து 15 நாட்கள் பிராக்டிகல் வகுப்புகளையும் நடத்துகிறாராம். யாரால் எல்லாம் 15 நிமிடங்கள் அல்லது அதை விட விரைவாக செய்ய முடிகிறதோ.. அவர்களை மட்டும் கொள்ளை சம்பவத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுபோன்ற 30க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேலையில்லாத இளைஞர்களை தவறான திசையில் வழிநடத்தும் சுதிர் மிஸ்ரா போன்ற நபர்களாலேயே குற்றங்கள் அதிகரிப்பதாகவும் இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications