உ.பி உள்ளாட்சி தேர்தலிலும் கோட்டையை கைப்பற்றும் பாஜக! பலனளித்த யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பாஜக முன்னிலையில் இருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் 17 மாநகராட்சி ஆணையர், 1,401 மாநகராட்சி உறுப்பினர்களுக்காக தேர்தல் கடந்த 4 மற்றும் 11ம் தேதியென இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 4.32 கோடி வாக்காளர்கள் கொண்ட இம்மாநிலத்தில் 53 சதவிகித வாக்குகள் பதிவாகின. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை இரண்டாவது முறை கைப்பற்றிய நிலையில் உள்ளாட்சி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு நீண்டிருந்தது.

இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களில் பாஜக முன்னிலையில் இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்படி 10 மாநகராட்சி ஆணையர் பதவிகளை பாஜக கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் பாஜக தற்போது 15 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக வாரணாசியில் பாஜக 16,000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறது. அதேபோல அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தலா ஒரு இடத்தை கைப்பற்றும் என்றும், மீதமுள்ள இடங்களில் கடும் போட்டி நிலவும் எனவும் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டது.
அதேபோல ஓரிரு இடங்களில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் முன்னிலையில் இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் சீனில் இல்லாமல் கடைசியாக இருக்கிறது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையாக முன்னிலையில் இருக்கிறது. இதனை கட்சியினர் கொண்டாடி வரும் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த தேர்தலை பொறுத்த அளவில் பாஜகவுக்கு பெரும் சவாலாக அமைந்தது என்கவுன்ட்டர் விஷயம்தான்.
மாநிலத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை 183 குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இது பாஜக மீதும் யோகி மீதும் பெரும் குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை கடந்தது பாஜக தற்போது வெற்றிவாகை சூட தயாராகி வருகிறது. மட்டுமல்லாது இந்த தேர்தல் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் பார்க்கப்பட்டதால் அனைத்து கட்சிகளும் தங்கள் முழு பலத்தை பயன்படுத்தி களத்தில் பணி செய்தன. ஆனால் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு இந்த தேர்தலில் பாஜகவை வெற்றியை நோக்கி நகர்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications