உத்தரப் பிரதேசத்தில் SIR ஏற்படுத்திய புதிய குழப்பம்.. சாதுக்களுக்கு கேள்விக்குறியாகும் வாக்குரிமை!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த(SIR) நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இம்மாநிலத்தில் உள்ள சாதுக்கள் மற்றும் சன்யாசிகள் புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தை துறந்தவர்கள் என்பதால், SIR படிவங்களில் தாய் பெயரை குறிப்பிடாமல் விட்டனர். அப்படி விட்டால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியாது. இந்நிலையில், தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் படிவங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 26 வரை நீட்டிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
வாரணாசி, மதுரா-பிருந்தாவன் மற்றும் அயோத்தி போன்ற கோவில் நகரங்களில் உள்ள சாதுக்கள் மற்றும் சன்யாசிகளை அணுகி, SIR படிவங்களை பூர்த்தி செய்ய வைப்பதில் அம்மாநில அரசு சிரமப்பட்டது.

உலக பற்றுதல்களைத் துறந்த சாதுக்கள் மற்றும் சன்யாசிகள், தங்கள் ஆன்மீக குருவை அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளில் தந்தையாகக் குறிப்பிடுவது வழக்கம். அவர்களின் குருக்களும் குடும்ப வாழ்க்கையைத் துறந்தவர்கள் என்பதால், சாதுக்கள் வழக்கமாக தாயின் பெயரை அதிகாரப்பூர்வ ஆவணங்களில் குறிப்பிடுவதில்லை. இதுதான் SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் சிக்கலை ஏற்படுத்தியது.
படிவங்களில் பெயர் நிரப்புதில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள விஷ்வ இந்து பர்ஷித் புதிய யோசனையை பின்பற்றிருக்கிறது. அதாவது, அயோத்தியில், முன்னாள் பாஜக எம்.பி.யும், விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி, தனது தாயின் பெயராக 'ஜானகி' என குறிப்பிட்டிருக்கிறார். இந்த பெயர் உண்மையானது அல்ல. ராமரின் மனைவி சீதையின் மற்றொரு பெயர்தான் இது. இதுபோல திகம்பர் அகாடாவின் மகாமண்டலேஷ்வர் பிரேம் சங்கர் தாஸ் உட்பட பல சாதுக்களும் ஜானகி, சீதா அல்லது ராமரின் தாய் கௌசல்யா எனத் தங்கள் தாயின் பெயராக குறிப்பிட்டிருக்கின்றனர்.
தாய் பெயருக்கான இடத்தை காலியாக விட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படலாம் என்ற கவலை நிலவியதால், துறவிகளுக்கு அவ்வாறு செய்ய அறிவுறுத்தியதாக உள்ளூர் பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
அயோத்தியில் சுமார் 16,000 சாதுக்கள் மற்றும் சன்யாசிகள் இருப்பதாக பாஜக மதிப்பிடுகிறது. 2024 லோக்சபா தேர்தலில், அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்திருந்தது. இது கட்சிக்கு பெரும் சங்கடத்தை விளைவித்தது.
இந்த விவகாரம் குறித்து பாஜக பொதுச்செயலாளர் விஜய் பிரதாப் சிங் கூறுகையில், "முழுமையற்ற படிவங்கள் நிராகரிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, சாதுக்களும் சன்யாசிகளும் தங்கள் மத மரபுப்படி புனிதமான பெயரான ஜானகி அல்லது வேறு ஏதேனும் புனித் பெயரையும் தாயின் பெயர் நிரப்பும் இடத்தில் எழுதும்படி நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். அவர்களில் பலர் எங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டனர்" என்று கூறியுள்ளார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் துறவிகளை அணுகி, படிவங்களை பூர்த்தி செய்வதாகவும், எந்த இடத்தையும் காலியாக விடாமல் பார்த்துக்கொள்வதாகவும் அயோத்தி தேர்தல் பதிவு அதிகாரியுமான அனிருத் பிரதாப் சிங் விளக்கமளித்துள்ளார்.
சாதுக்கள் மற்றும் சன்யாசிகளை அவர்களின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளில் கண்டுபிடித்து, படிவங்களை சரியான நேரத்தில் பூர்த்தி செய்ய வைப்பது மற்றொரு சவாலாக இருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications