வேற லெவல் சேஞ்ச்.. அடேங்கப்பா விரைவில் புதுப்பொலிவுடன் தலைநகர் லக்னோ.. உ.பி. யோகியின் அசத்தல் பிளான்
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவின் வளர்ச்சி குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதிய திட்டத்தை வகுக்க இருக்கிறார்
லக்னோ: தேசிய தலைநகர் சுற்றியுள்ள பகுதிகளை விரிவாக்கம் செய்வதைப்போல மாநில தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
தேசிய தலைநகர் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தியிருப்பதைப்போலவே, மாநில தலைநகரான லக்னோவை மேம்படுத்த உத்தரப் பிரதேச பாஜக அரசு திட்டமிட்டிருக்கிறது. நேற்று(மார்ச் 15) அயோத்தி மற்றும் வாரணாசியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்ட யோகி ஆதித்யநாத் மாநில தலைநகர் வளர்ச்சி குறித்த பேசியிருக்கிறார். அதாவது லக்னோவுடன் அருகில் இருக்கும் மாவட்டங்களின் எல்லைகளை இணைத்து புதிய கட்டமைப்பு விரைவில் உருவாக்கப்பட இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில்தான் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை உத்தரப் பிரதேச பாஜக அரசு நடத்திக்காட்டியிருக்கிறது. இந்த மாநாட்டில் பேசிய யோகி ஆதித்யநாத், "பலரும் மும்பை, டெல்லி போன்ற இடங்களில்தான் இதுபோன்ற மாநாட்டை நடத்த முடியும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் நாங்கள் உத்தரப் பிரதேசத்திலேயே இந்த மாநாட்டை நடத்தி காட்டியிருக்கிறோம். இனி மாநிலத்தின் வளர்ச்சி பல மடங்கு வேகத்துடன் இருக்கும்" என்று கூறியிருந்தார்.
அதற்கேற்றார் போல பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் அறிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெடில் கூட மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதற்கேற்றார் போல் முன்னெப்போதை விடவும் கூடுதல் நிதியானது இந்த பட்ஜெட்டிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக SCR (State Capital Region) திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், "லக்னோ இன்று மிகப்பெரிய மெட்ரோபாலிடன் நகரமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து வசிக்க விரும்புகிறார்கள்.
லக்னோவை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல திட்டமிடப்படாத வளர்ச்சி குறித்த புகார்களும் அதிகம் வருகின்றன. இந்நிலையில் மாநில தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளை விரிவாக்கம் செய்வது பொருத்தமானதாக இருக்கும். இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பான செயல் திட்டத்தை தயார் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளை கேட்டிருக்கிறேன். ஏற்கெனவே உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலீட்டாளர்களின் தேவை என்ன என்பது குறித்து அவர்களிடமே நேரடியாக பேசி அதை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே மாநிலத்தின் வளர்ச்சி குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை. முதலீட்டாளர்கள் தொடர்பான எந்த ஃபைல்களும் தற்போது நிலுவையில் கிடையாது. வாரந்தோறும் துறை வாரியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தொழில் மேம்பாட்டு ஆணையர் அளவில் ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் பிரச்னை இருந்தால், தலைமைச் செயலரிடம் தெரிவித்து உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறேன்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications