"வேற வழி தெரியல".. உ.பி. பள்ளி மாணவிகளுக்கு.. கட்டாய தற்காப்புக் கலை பயிற்சி.. யோகி அதிரடி உத்தரவு
லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் கட்டாய தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த அதிரடி முடிவை உ.பி. அரசு எடுத்துள்ளது.
பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் ஆண்களை எப்படி தாக்குவது, கடத்த முயற்சிப்பவர்களை எவ்வாறு தாக்கி தப்பிப்பது போன்ற அடிப்படை அதிரடி பயற்சிகள் மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

அன்றாட நிகழ்வாக மாறிய பாலியல் குற்றங்கள்
நாட்டில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் இந்த சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன. பெண்களை பலாத்காரம் செய்வது, கொலை செய்வது, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு போன்ற குற்றச்சம்பவங்கள் உத்தரபிரதேசத்தில் அன்றாடம் நடக்கக்கூடிய நிகழ்வுகளாக மாறிவிட்டன. இதனால் அங்கு பெண் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு கூட பயப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கட்டாய தற்காப்புப் பயிற்சி
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உ.பி. அரசும், காவல்துறையும் எடுத்து வருகிறது. ஆனால், குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதனைத் தொடர்ந்து, இதுபோன்ற குற்றங்களை குறைக்க என்ன நடவடிக்கைகளை எடுப்பது என காவல்துறை உயரதிகாரிகளிடம் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த சில வாரங்களாக தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது, மாணவிகளுக்கு கட்டாய தற்காப்புக் கலை பயிற்சி அளிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நுணுக்கமான தாக்குதல் உத்திகள்
இப்போது உ.பி.யில் உள்ள பல்வேறு மகளிர் பள்ளிகளில் தற்காப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. ஆனால் விருப்பமுள்ளவர்கள் மட்டும் அதில் இணைகிறார்கள். மற்ற மாணவிகள் இதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. எனவேதான், இந்தக் கட்டாய தற்காப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தற்காப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் பல அடிப்படையான மற்றும் நுணுக்கமான தாக்குதல் பயிற்சிகள் மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

ஒரே அடியில்..
பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் ஆண்களை ஒருசில தாக்குதல்களிலேயே நிலைக்குலையச் செய்வது, கடத்த முயற்சிக்கும் நபர்களை ஒரே அடியில் மூர்ச்சையாக்குவது போன்ற அதிரடி பயிற்சிகள் இதில் வழங்கப்படவுள்ளன. இதற்காக உத்தரபிரதேசத்தில் இருந்து மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள சிறந்த தற்காப்பு நிபுணர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை வைத்து பயற்சி அளிக்க உ.பி. அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications