வேலை தராத படிப்பால் என்ன பயன்?.. சான்றிதழ்களை எரித்த இளைஞர்.. விபரீத முடிவால் உயிரே போச்சு.. சோகம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் படித்த படிப்புக்கு உரிய வேலை கிடைக்காததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் சரமாரியாக விமர்சித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில், அதாவது மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து வேலையில்லா பிரச்னை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதனை அவ்வப்போது வெளியாகும் சில ஆய்வு அறிக்கைகளும் உறுதி செய்து வருகின்றன. இந்நிலையில் வேலை கிடைக்காததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

25 வயதான பிரஜேஷ் பால் எனும் இளைஞர், தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் தன்னுடைய எல்லா படிப்பு சான்றிதழ்களையும் எரித்திருக்கிறார். இது தொடர்பாக தற்கொலை குறிப்பில், “வேலை கொடுக்க முடியாத பட்டத்தால் என்ன பயன்? எங்கள் வாழ்நாளில் பாதி படிப்பிலேயே கழிந்துவிட்டது. அதனால் இப்போது எங்கள் இதயம் நிறைந்திருக்கிறது” என்று எழுதி வைத்திருக்கிறார். இவரது தற்கொலைக்கு ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில், போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வு நடந்திருக்கிறது. இதில் வினாத்தாள் லீக்காவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ஒரு வேளை இது உறுதி செய்யப்பட்டால், தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும். எனவே இந்த தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் பிரஜேஷ் பால் என்ற 25 வயது இளைஞர் வேலையில்லா திண்டாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டார்.பிரஜேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கல்லூரியில் தான் வாங்கிய அனைத்து பட்டங்களையும் எரித்துவிட்டார்.
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் இன்று நாட்டில் உள்ளது. பல ஆண்டுகள் காத்திருந்து ஆட்சேர்ப்பு வந்தாலும், தேர்வுக்குரிய வினாத்தாள் கசிந்து விடுகின்றன. உத்தரப்பிரதேசத்தில் டபுள் என்ஜின் அரசு தோல்வியடைந்துள்ளது, இளைஞர்கள் தங்கள் 'நீதிக்கான உரிமை'க்காக இன்று வீதியில் இறங்கி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications