உ.பி.யில் கொத்து கொத்தாக கொரோனா மரணங்கள்...சடலங்களை எரிக்கவிடாமல் வசூல்வேட்டையில் கான்டிராக்டர்கள்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா கோரத்தாண்டவமாடுவதால் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன. அதேநேரத்தில் சடலங்களை எரிக்க ரூ22,000 பணம் கட்டித்தான் ஆக வேண்டும் என்று மயானங்களில் கான்டிராக்டர்கள் அடாவடி வசூலில் ஈடுபடுகிற கொடுமையும் அம்பலத்துக்கு வந்துள்ளது.
உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்புகள் மிக மோசமாக உள்ளன. இதனால் உக்கிரமான கொரோனா 2-வது அலையை எதிர்கொள்ளவே முடியாமல் இந்த மாநில அரசுகள் நிலைகுலைந்து போயுள்ளன.

உ.பி.யில் அதிகம்
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன்களை பெறுவதிலும் கூட வட இந்திய மாநிலங்கள் பெரும் போராட்டத்தை சந்தித்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

ஒரே இடத்தில் எரியூட்டுதல்
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்கள் லக்னோவில் ஒரே இடத்தில் எரிக்கப்பட்டு வருகின்றன. லக்னோவில் கொத்து கொத்தாக சடலங்களை எரியூட்டும் படங்கள் நெஞ்சை உறைய வைத்துள்ளன.

எரியூட்ட பணம் கறக்கும் கும்பல்
இதனிடையே லக்னோவில் சடலங்களை எரியூட்டுவதற்காக ரூ22,000 பணம் கட்டித்தான் ஆக வேண்டும் என கான்டிராக்டர்கள் பணம் பறிப்பதில் படுதீவிரமாக உள்ளனர். ஈவிரக்கமே இல்லாத இந்த கல்நெஞ்சக்காரர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

நடவடிக்கை எடுங்க..
இத்தகைய இரக்கமற்ற மனிதர்கள் மீது உத்தரப்பிரதேச அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசோ, எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் மும்முரமாக இருப்பதுதான் கொடூரம்!












Click it and Unblock the Notifications