’ரசகுல்லா’வுக்கு இப்படியா.. திருமண வீடே களேபரம்.. போலீஸ் வரைக்கும் போன பஞ்சாயத்து
லக்னோ: கல்யாண வீட்டில் ரசகுல்லா தீர்ந்து போனதால் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 6 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவுக்கு நிலமை கை மீறி சென்றுள்ளது.
திருமண வீடு என்றாலே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. திருமணத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே நெருங்கிய உறவினர்கள் வீட்டிற்கு வந்து விட திருமண வீடே இரண்டு மூன்று நாளாக ஒரே அரட்டையும் ஜாலியாகவும் இருக்கும். அதேபோல், திருமண வீட்டில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது. பல திரைப்படங்களிலும் கூட கல்யாண வீட்டில் ஒன்னும் இல்லாததை பெருசாக்கி உறவினர்கள் வம்பிழுப்பதை ஜாலியாகவும் காட்டியிருப்பார்கள்.

நிஜத்திலும் கூட கல்யாண வீட்டில் அவ்வப்போது சில நிகழ்வுகள் நடைபெறும். சில நேரங்களில் இது வரம்பு மீறி பெரும் மோதலாக கூட மாறிவிடுவதை கேள்வி பட்டு இருக்கலாம். அதேபோன்ற ஒரு நிகழ்வுதான் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. கல்யாண வீட்டில் ரசகுல்லா தீர்ந்து போனதால் திருமண வீட்டில் இரு தரப்பினர் இடயே மோதல் வெடித்துள்ளது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ரசகுல்லா பற்றாக்குறை: உத்தர பிரதேச மனைலம் ஷம்ஷாபாத் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண வீட்டில் தடல் புடலாக விருந்தும் நடைபெற்றுள்ளது. திருமண வீட்டிற்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தி விட்டு சாப்பாட்டையும் ஒரு பிடி பிடித்து இருக்கிறார்கள். அப்போது கல்யாண வீட்டில் உணவில் பரிமாறப்பட்ட ரசகுல்லா காலியானதாக தெரிகிறது.
இது குறித்து திருமண வீட்டிற்கு வந்த ஒருவர் அடித்த கமெண்ட்டினால் தான் கல்யாண வீட்டில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. மணமக்கள் வீட்டினர் ஒருவொருக்கொருவர் பலமாக மோதிக்கொண்டுள்ளனர். இந்த அடிதடியில் 6 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். இந்த மோதல் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் பறந்தது. உடனடியாக விரைந்து வந்த போலீசார், நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
போலீசார் விசாரணை: காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள போலீசார் அவர்களின் உடல் நிலை அச்சப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று கூறினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இந்த மோதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரசகுல்லா தட்டுப்பாட்டால் கல்யாண வீட்டில் நடைபெற்ற மோதல் குறித்து அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் எட்மாத்பூரில் கல்யாண வீட்டில் ஏற்பட்ட இனிப்பு பற்றாக்குறையால் பெரும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications