பெட்ரோல் டேங்கில் காதலி.. பைக் ஓட்டிக்கொண்டே சல்லாபம்.. முத்தம் வேற.. தட்டி தூக்கிய போலீஸ்!
லக்னோ: பெட்ரோல் டேங்கில் காதலியை அமர வைத்துக் கொண்டு கட்டிப்பிடித்தபடி தேசிய நெடுஞ்சாலையில் இளம் ஜோடி பயணிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. போலீசார் இது தொடர்பாக பைக் ஓட்டிச்சென்ற இளைஞருக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
தற்போதைய கால கட்டத்தில் சில இளம் காதல் ஜோடிகள் பொது வெளியில் வரம்பு மீறி நடந்து கொள்ளும் முறை பலரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. பேருந்து, ரயில் என பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் கூட ஏதோ தனி உலகத்தில் வசிப்பது போல எதையும் அலட்டிக் கொள்ளாமல் தங்களுக்குள் நெருக்கமாக பேசி காதலை ஒரு சிலர் வளர்ப்பது பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

பீச் பார்க்குகளில் இதுபோன்ற நிலை இருந்த காலம் மாறி தற்போது ஓடும் பைக்கில் உயிரை துச்சமாக மதித்து ஒரு சில ஜோடிகள் இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் உள்ள காசியபாத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஜோடி முத்த மழை பொழிந்தவாறு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் பெட்ரோல் டேங்கில் தன்னை பார்க்கும் வகையில் அமர வைத்திருக்கிறார். இளைஞர் இளம்பெண்ணும் கட்டிப்பிடித்துக் கொண்டு பைக்கில் இருக்கின்றனர். சாலை விதிகளை மீறி தங்கள் உயிருக்கு மட்டும் இன்றி எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக சாலையில் அநாகரீக முறையில் சென்றனர்.
இருவரும் ஹெல்மெட்டும் அணியவில்லை. சக வாகன ஓட்டிகள் இந்த வீடியோவை எடுத்து இணையத்தில் பரவ விட்டனர். சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் என்ன நினைப்பார்கள், இப்படி போக்குவரத்து விதியை மீறி செல்வது சரிதானா? என்று நினைத்து பார்க்காமல் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு பைக்கில் செல்கின்றனர். சுற்றிலும் கார்களும் பைக்குகளும் செல்லும் பரபரப்பான சாலையில் இது போன்ற செயலில் அந்த இளம் ஜோடி ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து, பைக்கின் நம்பர் ப்ளேட்டில் உள்ள எண்ணை வைத்து போலீசார் அந்த ஜோடியை தேட தொடங்கினர். இதில், பைக்கின் எண் போலி என தெரியவந்தது. எனினும், பைக் ஓட்டிச்சென்ற நபரை கண்டுபிடித்த போலீசார், சாலை போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அவருக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
சமீப காலமாக இளம் ஜோடிகள் பலரும் இப்படி ஆபத்தான முறையில் சாகச பயணங்களை மேற்கொண்டு சல்லாபத்தில் ஈடுபடும் போக்கு அதிகரித்து இருப்பதாகவும் போலீசார் வெறும் அபராதங்கள் மட்டும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இத்தகைய போக்கு மாறும் எனவும் சமூக ஆர்வர்கள் கூறும் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications