நாட்டிலேயே முதல்முறை! உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மின்சார வாகனங்கள்! மாற்றியோசித்த யோகி!
லக்னோ: நாட்டிலேயே முதல்முறையாக அரசு அலுவலகங்களின் பயன்பாடு மற்றும் அரசு அதிகாரிகளின் உபயோகத்திற்காக மின்சார வாகனங்களை வழங்கிய மாநிலம் என்ற பெருமையை உத்தரப்பிரதேசம் பெற்றுள்ளது.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் பொருட்டும், அதன் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகையிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்.

அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துத் துறை பயன்பாட்டுக்கும் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
மேலும், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உத்தரப்பிரதேச மாநில அரசு அலுவலக பயன்பாட்டுக்கும், அதிகாரிகளின் உபயோகத்திற்கும் 100% எலக்ட்ரிக் கார்களை மாற்ற முடிவெடுத்துள்ளார்.
இது நாட்டில் வேறு எந்த மாநிலமும் இதுவரை முன்னெடுக்காத ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. மின்சார வாகனங்களின் பயன்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் ''உத்தரப்பிரதேச மின்சார வாகன தயாரிப்பு மற்றும் இயக்கம் 2022'' என்ற கொள்கையை உருவாக்கியுள்ள உபி அரசு அதன் கீழ் பல்வேறு சலுகைகளையும் வழங்குகிறது.
அதன்படி மின்சார வாகனம் வாங்குவோருக்கு முதல் 3 ஆண்டுகள் வரி மற்றும் பதிவுக்கட்டணம் விலக்கு அளிக்கப்படவுள்ளது. மேலும், உத்தரப்பிரதேசத்திலேயே தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களாக இருந்தால் அதற்கு முதல் 5 ஆண்டுகள் வரி மற்றும் பதிவுக்கட்டணத்தில் விலக்கு தரப்படவுள்ளது.

உபியில் அரசுத்துறை பயன்பாட்டுக்கு மின்சார வாகனங்களை கொண்டு வர வேண்டும் என்பது யோகி ஆதித்யநாத்தின் லட்சிய திட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications