இலவச பஸ் பயணம், கேஸ், ஸ்கூட்டி.. தமிழக பாணியில்.. உத்தரப்பிரதேச பாஜக கவர்ச்சிகர தேர்தல் அறிக்கை!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது பாஜக. இலவச சிலிண்டர், இலவச பேருந்து பயணம், இலவச டூ வீலர் என பல இலவசங்களை தேர்தல் அறிக்கையில் வாரி இறைத்திருக்கிறது பாஜக.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச தேர்தலை நாடே உற்று நோக்கி வருகிறது. நான்கு முனை தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது உத்தரப்பிரதேசம். இந்த முறை ஆட்சியில் இருக்கும் பாஜக, மீண்டும் அரியணையில் அமர முயற்சி செய்து வருகிறது. விவசாயிகள் பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது உத்தரப்பிரதேசம்.

தேர்தல் அறிக்கை
உத்தரப்பிரதேசம் வளர்ச்சியடைந்தது என்றும் வன்முறை இல்லாமல் இருப்பதாகவும் மாநில அரசைப் புகழ்ந்து பேசினார் பிரதமர். ஆனாலும், கள யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது. அதை சமாளிக்க தங்கள் தேர்தல் அறிக்கையையே ஆயுதமாக பயன்படுத்த முடிவெடுத்தது பாஜக. அதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரப்பிரதேச பாஜகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

இலவசம்
உத்தரப்பிரதேசத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வளர்ச்சிக்குத் தேவையானதை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் ''ஹோலி மற்றும் தீபாவளிக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி செல்லும் பெண்களுக்கு இலவச டூ வீலர் என்று அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு பேருந்தில் இலவச பேருந்து பயணம் செய்யலாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

விவசாயிகள்
மேற்கு உத்தரப்பிரதேசத்தில் கரும்பு விவசாயிகள் ஓட்டு கேட்டு வரும் பாஜகவினரை ஊருக்குள் விடாமல் துரத்தி அடித்தனர். அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில் கரும்பு ஆலை பாக்கியை 15 நாட்களுக்குள் சரி செய்துவிடுவதாக உறுதியளித்துள்ளது பாஜக. விவசாயிகளை மகிழ்விக்க இலவச மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லவ் ஜிகாத்
அயோத்தியில் ராமாயண பல்கலைக்கழகம் கட்டப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, லவ் ஜிகாத்தில் ஈடுபட்டால், 10 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்ச அபராதமும் விதிக்கப்படும் என்றும் தேர்தல் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications