''ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட தடைவிதிக்க முடியாது.."அலகாபாத் ஐகோர்ட் திட்டவட்டம்!பரபர பின்னணி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ய வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அளித்த அனுமதியை ரத்து செய்ய அலகாபாத் ஐகோர்ட் மறுத்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ளது ஞானவாபி மசூதி.. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டது.

இருப்பினும், ஒரு தரப்பினர் இங்கு விஷேஷ்வர் கோயில் இருந்ததாகவும் அதை இடித்தே ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இந்த குறித்து வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
ஞானவாபி மசூதி: அப்போது நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வும் நடத்தப்பட்டது. மேலும், ஞானவாபி மசூதியில் உள்ள தடை செய்யப்பட்ட பகுதியான வியாஸ் கா தெகானாவில் இந்து கடவுள்களின் சிற்பங்கள் இருப்பதாகவும் அதை வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் இந்து பெண்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதிக்குள் உள்ள தடை செய்யப்பட்ட பகுதியான வியாஸ் கா தெகானாவில் இந்து மத பிரார்த்தனைகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மேல்முறையீடு செய்ததது.
இன்று தீர்ப்பு: இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், அலகாபாத் ஐகோர்ட் இந்த விவகாரத்தில் இன்று காலை தீர்ப்பளித்தது நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் இன்று காலை தீர்ப்பு வழங்கினார். ஞானவாபி விவகாரத்தில் மசூதி தரப்பில் பல மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் இந்த மேல்முறையீட்டு மனுவுக்குத் தான் முதல் மனுவாகத் தீர்ப்பு வந்துள்ளது.
கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஞானவாபியின் தெற்கு பாதாள அறையில் உள்ள சிலைகளுக்குப் பூஜைகளைச் செய்ய வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி நள்ளிரவில் மசூதியின் வளாகத்தில் இந்து பூஜைகளைச் செய்யப்பட்டன. பின்னர் தெற்கு பாதாள அறை பக்தர்களுக்கும் திறக்கப்பட்டது.
என்ன நடந்தது: வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மசூதி கமிட்டி முதலில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இருப்பினும் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து சில மணி நேரத்திலேயே மசூதி கமிட்டி நீதிமன்றத்தை நாடியது. மேலும், பிப்ரவரி 13 அன்று, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞானவாபி வளாகத்திற்குச் சென்று வியாஸ் கா தெகானாவில் வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீட்டு மனுவில் இரு தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் தான் அலகாபாத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அதில் ஞானவாபி மசூதி கமிட்டி மனுவை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஞானவாபி விவகாரத்தில் வராணாசி நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என்ரும் அலகாபாத் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications