121 பேரின் உயிரை குடித்த ஹத்ராஸ் கூட்ட நெரிசல்.. உத்தரபிரதேசம் சென்ற ராகுல் காந்தி.. நேரில் ஆறுதல்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் கடந்த 2ம் தேதி நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர். மேலும் ஏராளமானவர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பாக பாஜக அரசை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல சாமியார் போலோ பாபா என்ற நாராயண் ஹரி. இவருக்கு மாநிலம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். கடந்த 2ம் தேதி ஹத்ராஸின் சிகட்ராரு பகுதியில் உள்ள புல்ராய் கிராமத்தில் அவருடைய ஆன்மிக சொற்பொழிவுக்கு நடந்தது.

இதில் போலோ பாபா பங்கேற்றார். மொத்தம் 80 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் எனக்கூறி நிகழ்ச்சிக்கு அனுமதி பெறப்பட்டது. ஆனால் சுமார் 2.50 லட்சம் பேர் வரை பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டம் அதிகளவில் இருந்தது. அதன்பிறகு மாலை 3.30 மணியளவில் சாமியார் போலோ பாபா நிகழ்ச்சியை முடித்து விட்டு கிளம்பினார்.
அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 121 பேர் பலியாகினர். மேலும் ஏராளமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதாவது போலோ பாபாவை பார்க்கவும், அவருடைய காலடி மண்ணை சேகரிக்கவும் ஏராளமானவர்கள் ஓடினார்கள். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மிதித்து பலரும் ஓடிய நிலையில் மூச்சுத்திணறி அடுத்தடுத்து பலி ஏற்பட்டது.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்நிலையில் தான் ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானதற்கு பாஜக அரசும், போலீசாரும் தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் தான் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே தான் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானது தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு விசாரணை நடத்தி அது விபத்தா? இல்லை சதியா? என்பதை கண்டுப்பிடித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று காலையிலேயே உத்தர பிரதேசம் புறப்பட்டு சென்றார். ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். அலிகாரில் வசித்து வரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறி வருகிறார். ராகுல் காந்தியை பார்த்தவுடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கண்கலங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications