‛‛உனக்கு 17.. எனக்கு 63’’.. காங்கிரஸ்-சமாஜ்வாதி தொகுதி பங்கீட்டில் வெற்றி.. உ.பி.யில் பாஜகவுக்கு ‛பேரிடி’
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி வெற்றிகரமாக தொகுதி பங்கீட்டை முடித்திருக்கிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் 20 தொகுதிகளுக்கும் அதிகமாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 17 தொகுதிகளில் களமிறங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எதிர் வரும் லோக்சபா தேர்தல் காங்கிரசுக்கு மிக முக்கியமானதாகும். ஆட்சியில் இல்லாத கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஏராளமான இழப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில், கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கட்சியை விட்டு விலகினர். அதில் சிலர் பாஜகவில் ஐக்கியமாகினர். பஞ்சாப் தொடங்கி பல மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் இழந்திருக்கிறது.

எனவே கட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் எனில், கூட்டணி அமைத்தாக வெண்டும் என்கிற நிலைமைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. இப்படித்தான் இந்தியா கூட்டணி உருவானது. ஏற்கெனவே கூட்டணியாக இருந்த கட்சிகளோடு, புதியதாக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உ்ள்ளிட்ட கட்சிகளையும் இணைத்து கூட்டணியை பலப்படுத்தியது. இதனை தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கின. தேர்தலுக்கு கொஞ்ச நாட்களே இருக்கும் நிலையில், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது.
இந்நிலையில், தற்போது முதன் முறையாக உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டை உறுதி செய்திருக்கிறது. அதாவது, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் களம் இறங்குகிறது. அமேதி, ரேபரேலி, வாரணாசி உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு பெற்றிருக்கிறது. 20+ தொகுதிகளில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 17 தொகுதிகளோடு காங்கிரஸ் சுருங்கிக்கொண்டது பேசு போருளாகியுள்ளது.
ஆனால், இந்த தொகுதி உடன்பாடு வெற்றிக்கான அறிகுறி என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த முறை உடன்பாடு எட்டப்படாததால் இரு கட்சிகளும் தனித்தனியே களம் இறங்கின. இதில் இரண்டு கட்சிகளுக்கும் பெரும் தோல்வி ஏற்பட்டது. இது பாஜக இரண்டாவது முறை ஆட்சி அதிகாரத்தை பிடிக்க உதவியது.
எனவே, லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேசமும், பீகாரும் முக்கியமானவை. இரண்டு மாநிலங்களிலும் மொத்தம் 120 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. இந்த 120 தொகுதிகளில் பாஜகவை 20-30க்குள் சுருக்க வேண்டும். அப்படி சுருக்கினால்தான் பாஜக 200-250 எண்ணிக்கையில் நிற்பார்கள். ஆக இந்தியா கூட்டணி மிக மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய மாநிலம் உத்தரப் பிரதேசம்தான். தற்போது இந்த மாநிலத்தில் காங்கிரசும், சமாஜ்வாதி கட்சியும் வெற்றிகரமாக தொகுதி பங்கீட்டை முடித்திருப்பது லோக்சபா தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். தற்போது சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications