பாஜகவை தெறிக்கவிட்ட அகிலேஷ் யாதவ்! "கர்நாடகா காங்கிரஸ்" பாணியில் வேட்பாளர்களை களமிறக்கிய சமாஜ்வாதி!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வேட்பாளர்களை தேர்வு செய்துள்ள விதம் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பின்பற்றிய வியூகத்தையே உத்தரப்பிரதேசத்தில் செயல்படுத்தி இருக்கிறோம் என்கிறது சமாஜ்வாதி கட்சி.
18-வது லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் 16, ஏப்ரல் 26 ஆகிய தேதிகளில் 2 கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்டது.

உத்தரப்பிரதேசத்தைத்தான் பாஜக மிகப் பெரிய அளவு நம்பி இருக்கிறது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உபியில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 62 தொகுதிகளைக் கைப்பற்றியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகளையும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5, காங்கிரஸ் 1 இடத்தையும் கைப்பற்றியது.
சமாஜ்வாதி- காங்கிரஸ்: தற்போதைய லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 80 இடங்களையுமே கைப்பற்றும் முனைப்பில் பாஜக களம் காண்கிறது. ஆனால் இந்த முறை பாஜகவுக்கு எளிதாக வெற்றியைத் தந்துவிடக் கூடாது என்பதில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் கை கோர்த்து நிற்கின்றன. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாதி கட்சி மொத்தம் 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இஸ்லாமியர்களும் சமாஜ்வாதியும்: பொதுவாக சமாஜ்வாதி கட்சி தேர்தல்களில் இஸ்லாமியர்களுக்கு அதீத முக்கியத்துவம் தரும். ஆனால் இம்முறை 4 முஸ்லிம்களை மட்டுமே வேட்பாளர்களாக அறிவித்துள்ளார் அகிலேஷ் யாதவ். உத்தரப்பிரதேசத்தில் 20% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல ராம்பூர் தொகுதி என்றாலே ஆஸம் கான் என்பதைத்தான் அகிலேஷ் யாதவ் தந்தை முலாயம் சிங் செயல்படுத்தி வந்தார். தற்போது ஆஸம் கான் குடும்பமே சிறையிலும் தேர்தலில் போட்டியிடாத நிலையில் இருந்தாலும் அவரது ஆதரவாளர்களுக்கும் அகிலேஷ் யாதவ் சீட் தரவில்லை என்பதும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள்: அதேபோல பெரும்பான்மை ஜாதியினருக்கு மட்டுமே சீட் கொடுக்கப்படுகிறது என்ற பார்முலாவையும் அகிலேஷ் யாதவ் உடைத்து பரவலாக சிறுபான்மை ஜாதிகளுக்கும் இம்முறை வாய்ப்பு தந்துள்ளார். மொரதாபாத், மீரட்டில் சிறுபான்மை ஜாதி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். பொதுத் தொகுதியில் கூட தலித் வேட்பாளரை களமிறக்கி இருக்கிறார் அகிலேஷ். அத்துடன் யாதவ் ஜாதியினருக்கே அதீத முக்கியத்துவம் தரும் கட்சி சமாஜ்வாதி என்பதையும் அகிலேஷ் மாற்ற முயற்சித்துள்ளார். தமது குடும்பத்தினரைத் தவிர பெரிய அளவுக்கு யாதவ் ஜாதியினரை வேட்பாளராகவும் அகிலேஷ் முன்னிறுத்தவில்லை. யாதவ் ஜாதியினர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையிலான அகிலேஷின் இந்த வியூகம் பேசுபொருளாகி இருக்கிறது. இதனால் யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் 26 வேட்பாளர்களை களமிறக்கினார் அகிலேஷ். இவர்களில் குர்மி ஜாதியைச் சேர்ந்தவர்கள் 9 பேர். மவுரியா, சாக்யா, குஷாவாஹா ஆகிய ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் 6 பேர் வேட்பாளர்கள். நிஷாத் ஜாதியின் 4 பேரை வேட்பாளர்களாக்கி இருக்கிறார் அகிலேஷ். அதேபோல தனித் தொகுதிகளில் பொதுவாக ஜாதவ் ஜாதியினரை வேட்பாளர்களாக நிறுத்தும் போக்கு இருந்தது. ஆனால் தலித்துகளில் ஜாதவ் அல்லாத இதர ஜாதியினரையும் இம்முறை அகிலேஷ் களமிறக்கி இருக்கிறார். பொதுவாக ஜாதவ் ஜாதியினர் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கி. அதனால் இதர தலித் ஜாதிகளை குறிவைத்துள்ளார் அகிலேஷ் யாதவ்.
கர்நாடகா காங்கிரஸ் பாணி: சமாஜ்வாதி கட்சியின் இந்த புதிய வியூகம் குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சி மூத்த நிர்வாகிகள், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பின்பற்றிய வியூகம்தான். அனைத்து ஜாதியினருக்குமான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது. கர்நாடகாவில் லிங்காயத், ஒக்கலிகா கவுடாக்களுக்கு அப்பால் குருபா உள்ளிட்ட ஜாதியினருக்கும் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் கொடுக்கிறது. அந்த பாணிதான் இது என்கின்றனர்.
பழைய பார்முலாவில் காங்கிரஸ்: ஆனால் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கமான பார்முலாவையே பின்பற்றி வேட்பாளர்களை இறக்கி இருக்கிறது. 17 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் உயர் ஜாதியினரையே அதிகமான வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. 2 முஸ்லிம்களையும் 3 இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரையும் வேட்பாளராக நிறுத்தியது காங்கிரஸ்.












Click it and Unblock the Notifications