2024ம் ஆண்டுக்குள் அமெரிக்காவை விட சிறப்பான சாலை.. உ.பியே உருமாறும்.. அமைச்சர் கட்கரி வாக்குறுதி
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாலை வரும் 2024ம் ஆண்டிற்குள் அமெரிக்காவின் சாலைகளை விட சிறந்ததாக மாற்றியமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த கட்கரி தற்போது இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி ரூ.15 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையை திறந்து வைத்தார். சில தினத்திற்கு முன் பெய்த மழை காரணமாக இந்த சாலை பலத்த சேதமடைந்தது. இவ்வாறு இருக்கையில் உத்தரப் பிரதேச சாலை குறித்த புதிய அறிவிப்பை நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.

15,000 கோடி மதிப்பில் சாலை
கடந்த 2020ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார். ரூ.14,850 கோடி மதிப்பில் 296 கி.மீ தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என்பதுதான் அது. இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சுமார் 28 மாத கால உழைப்பில் இந்த சாலை உருவாக்கப்பட்டது. அண்மையில் இதனை மக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

அமெரிக்காவுக்கு நிகரான சாலை
இந்த சாலை போர் விமானங்கள் கூட அவசரத்திற்கு தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இப்படி இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழையில் இந்த சாலை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. ஆங்காங்கே சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இப்படி இருக்கையில் வரும் 2024ம் ஆண்டுக்குள் உத்தரப் பிரதேசத்தின் சாலைகள் அமெரிக்காவின் சாலையை விட தரமானதாக இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தனியாருடன் கூட்டு
அம்மாநில தலைநகர் லக்னோவில் நேற்று (அக்.09) நடைபெற்ற இந்திய சாலை காங்கிரஸ் (IRC) கூட்டத்தில் பங்கேற்று பேசிய கட்கரி இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அம்மாநிலத்திற்கு ரூ.8,000 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார். இதனையடுத்து மாநில அரசுக்கு சில கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார். அதாவது, மாநிலத்தின் நகர் புறங்களில் டீசல் பேருந்துகளை தவிர்த்து, இரட்டை அடுக்கு கொண்ட குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

விமர்சனம்
மட்டுமல்லாது மாநிலத்தின் அனைத்து பேருந்து நிலையங்களும் விரைவில் PPP திட்ட அடிப்படையில் தனியாருடன் கூட்டு சேர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை புதுப்பிக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.
15 கோடி ரூபாய் உழைப்பில் போடப்பட்ட சாலை 5 நாட்கள் மழைக்கே தாங்காத நிலையில் அமெரிக்காவை விட சிறப்பாக சாலை அமைக்கப்படும் என்று கூறுவது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications