வெளியில் தொங்கிய உடல்.. பணியின் 2வது நாளிலேயே தூக்கில் "நர்ஸ்".. உத்தர பிரதேசத்தில் மர்ம சம்பவம்!
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த 2வது நாளில் 18 வயது நிரம்பிய நர்ஸ் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டிய நிலையில் மூவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவு பகுதியில் புதிதாக ஏப்ரல் 25ல் மருத்துவமனை துவங்கப்பட்டது. புதிய மருத்துவமனை என்பதால் தற்போது தான் நோயாளிகள் வர துவங்கி உள்ளனர்.
இங்கு 18 வயது நிரம்பிய இளம்பெண் ஏப்ரல் 29ல் புதிதாக பணிக்கு சேர்ந்தார். இவர் மருத்துவமனை அருகே அறை எடுத்து தங்கி பணியை துவங்கினார்.

2வது நாள் பிணமாக மீட்பு
இந்நிலையில் முதல்நாள் பணிக்கு சென்ற அவர் வேலையை முடித்துவிட்டு அறைக்கு திரும்பினார். அதன்பிறகு அவர் 2வது நாள் பணிக்கு சென்ற நிலையில் மருத்துவனையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தனது முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தார். மேலும், கையில் சிறுதுணி வைத்திருந்தார். உடலை மீட்ட போலீசார் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

குடும்பத்தினர் குற்றச்சாட்டு
இந்நிலையில் இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். அதாவது மருத்துவமனையில் நோயாளிகள் இல்லாத நிலையில் அவரை மருத்துவமனை நிர்வாகம் போன் மூலம் அழைத்து இரவு பணி செய்ய வலியுறுத்தியது. மேலும் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

மருத்துவமனைக்கு சீல்
இதுபற்றி அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். மேலும் சாவுக்கு காரணமான மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூவர் மீது வழக்கு
இதுபற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சசி சேகர் சிங் கூறுகையில், ‛‛தூக்கில் பிணமாக தொங்கிய நர்சின் உடல் மீட்கப்பட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். அவர்களின் புகாரின் அடிப்படையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications