‛உபியை ஸ்வீப் செய்யும் பாஜக’.. லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு பெரிய ஷாக்! India Today சர்வே
லக்னோ: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் மனநிலை என்ன? என்பது பற்றி உத்தர பிரதேச மாநிலத்தில் இந்தியா டூடே சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பாஜக 80 தொகுதிகளில் 70 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும், ‛இந்தியா' கூட்டணியில் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் கடந்த ஆட்சியை விட குறையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. இதற்கிடையே தான் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் வியூகம் வகுத்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் ஆவலில் உள்ளது. மறுபுறம் பாஜகவின் வெற்றியை தடுத்து நிறுத்தி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சிகள் காய்நகர்த்தி வருகின்றன. இதற்காக 27 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. மாநிலம் வாரியாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில் அதிக நாடாளுமன்ற தொகுதிகள் கொண்ட மாநிலம் என்றால் அது உத்தர பிரதேசம் தான். இந்த மாநிலத்தில் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியால் எளிதாக மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும். தற்போது உத்தர பிரதேசத்தில் பாஜக மிகவும் வலுவாக உள்ளது. மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடப்பது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டியது உள்ளிட்ட விஷயங்கள் பாஜகவுக்கு உத்தர பிரதேசத்தில் பிளஸ் பாயிண்டாக உள்ளன.
தற்போது அங்குள்ள 80 தொகுதிகளில் பாஜகவுக்கு 62 எம்பிக்கள், கூட்டணி கட்சியான அப்னா தளத்துக்கு 2 எம்பிக்கள் உள்ளன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 எம்பிக்களும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 5 எம்பிக்களும், காங்கிரஸ் கட்சியில் ரேபரேலி தொகுதி எம்பியாக சோனியா காந்தியும் உள்ளன. கடந்த முறை சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து இருந்தன. இந்த முறை சமாஜ்வாதி கட்சி , காங்கிரஸ் மற்றும் ஆர்எல்டி கட்சியுடன் கூட்டணி வைத்து ‛இந்தியா' கூட்டணியில் உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் தனித்து களமிறங்குகிறது.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்களின் மனநிலை என்ன? என்பது பற்றி Mood Of the Nation 2024 என்ற பெயரில் இந்தியா டூடே சார்பில் நாடு முழுவதும் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு என்பது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 2024 ஜனவரி மாதம் 28 ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 35,801 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இந்தியாவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. உத்தர பிரதேசத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 50 சதவீத மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன.
அதன்படி பார்த்தால் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக வென்றதை விட கூடுதல் இடங்களை இந்த முறை அந்த கட்சி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உத்தர பிரதேசத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 62 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியாக அப்னா தளம் 2 தொகுதிகளையும் கைப்பற்றியது.
ஆனால் இந்த முறை பாஜக 50 சதவீத ஓட்டுகளுடன் 70 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என இப்போதைய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. மேலும் பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் 2 சதவீத ஓட்டுக்களுடன் 2 தொகுதிகளை கைப்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணிக்கு மொத்தம் 72 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என இந்த கருத்து கூறியுள்ளது.
மேலும் இந்த கருத்து கணிப்பின் படி உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த முறை பெற்ற 6 சதவீத ஓட்டுகளை தக்க வைக்கலாம் எனவும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியின் கட்சியின் ஓட்டு சதவீதம் என்பது கடந்த ஆண்டு தேர்தலை விட சரிவை சந்திக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஆண்டை போலவே ஒரு தொகுதியில் வெற்றி கிடைக்கலாம் எனவும், சமாஜ்வாதி கட்சிக்கு 5 முதல் 7 தொகுதிகள் வரை வெல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில அரசியலை பொறுத்தமட்டில் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதிக்கு பிறகு சில நிகழ்வுகள் நடந்துள்ளன. காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகளுடன் ‛இந்தியா' கூட்டணியில் ஜெயந்த் சவுத்ரியின் ஆர்எல்டி கட்சி உள்ளது. இந்த கட்சி பாஜகவுடன் கைகோர்க்கலாம் என கூறப்படுகிறது. இது நடந்தால் பாஜகவுக்கு அது பிளஸ் பாயிண்டாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த விவகாரம் என்பது கருத்து கணிப்பில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications