ஏசி கோச்சில் நெளிந்த உருவம்.. உஸ்ன்னு சத்தம் வேற! பாதியிலேயே நிறுத்தி பெட்டியை மாற்றிய ரயில்வேத்துறை
லக்னோ: உத்தரப் பிரதேசத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வந்து கொண்டிருந்த ரயிலில் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் 'இந்தியன் ரயில்வே' முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. ஒவ்வொரு நாளும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ரயில் பயணத்திற்கான மவுசு தொடர்ந்து கூடி வருகிறது.

இப்படி இருக்கையில் உத்தரப் பிரதேசத்திலிருந்து மகாராஷ்டிரா நோக்கி வந்துக்கொண்டிருந்த ரயிலில் பாம்பு ஒன்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூரில் இருந்து மும்பையின் பாந்த்ராவிற்கு செல்லும் ரயில் எண் 15067 கொண்ட கோரக்பூர்-பாந்த்ரா விரைவு ரயிலில் ஏசி கோச்சில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த ரயிலில் B-3 பெட்டியின் இருக்கை எண் 56 இல் பயணி ஒருவர் தனது பெர்த்தில் படுத்து வந்திருக்கிறார்.
அப்போது ஏதோ ஊர்வதை போன்று உணர்ந்திருக்கிறர். உனடியாக தனது செல்போனை எடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். வீடியோவில் கோச்சின் இடுக்கில் பாம்பு ஓடி மறைவது தெளிவாக தெரிகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பயணி, உடனடியாக ரயில்வே அதிகாரியிடம் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து ரயில் கான்பூர் வந்த பின்னர் நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பெட்டி மட்டும் தனியாக கழற்றப்பட்டிருக்கிறது.
இதனால் பயணிகள் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்திருக்கின்றனர். பின்னர் அதற்கு பதிலாக வேறு ஒரு பெட்டி இணைக்கப்பட்டு ரயில் புறப்பட்டிருக்கிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் ரயிலில் பாம்பு இருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். இருப்பினும் பயணிகள் அதே பெட்டியில் போக மறுப்பு தெரிவித்திருப்பதால் பெட்டி மாற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாம்புகள் குளிர் ரத்தம் கொண்ட உயிரினங்களாகும். உலகம் முழுவதும் மனிதர்கள் பரிணாமம் அடைவதற்கு முன்னரே பாம்புகள் தோன்றிவிட்டன. பாம்புகள் எல்லா காலநிலைக்கும், எல்லா இடத்திலும் வாழும் தன்மையை பெற்றிருப்பதால் விவசாய நிலங்கள் தொடங்கி வீடுகள் வரை இதனை மிக சாதாரணமாக பார்க்க முடிகிறது. இருப்பினும் பாம்பு குறித்த புரிதல்கள் மனிதர்களுக்கு இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் இருக்கும் பாம்புகளில் 70 சதவிகிதம் விஷமற்றவை, 30 சதவிகிதம்தான் விஷமானவை. குறிப்பாக 4 வகை பாம்புகள்தான் விஷம் கொண்டவை. நல்ல பாம்பு, சுருட்டை விரியன், கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவைதான் விஷம் கொண்டவை. இந்த பாம்புகள் எல்லா நேரங்களிலும் விஷத்தை பயன்படுத்துவதில்லை. சில நேரங்களில் Drybite எனப்படும் விஷமற்ற கடியைதான் கடிக்கின்றன. பாம்பு இயல்பாக வேகமாக நகரக்கூடியது. ஆனால் அதை தப்பிக்க விடாமல் செய்யும் போது அது விஷத்துடன் கடித்துவிடுகிறது. எனவே உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications