நெடுஞ்சாலையில் போர் விமானத்தில் தரையிறங்கிய மோடி - உ.பி.பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திறப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே எனப்படும் பூர்வாஞ்சல் அதிவிரைவு நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நெடுஞ்சாலையை திறந்து வைப்பதற்காக இதே சாலையில் அமைக்கப்பட்டுள்ள குரேபார் விமான ஓடுதளத்தில் போர் விமானத்தில் வந்து இறங்கினார் பிரதமர் மோடி.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் படுதீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றன.
மத்தியிலும் உ.பி.யிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) அடுத்தடுத்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடுக்கல் நாட்டுவது, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது என தீவிரமாக இருக்கிறது. அண்மையில் உ.பி.யில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்தார்.

பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை திறப்பு
இதனைத் தொடர்ந்து உ.பி.யின் பூர்வாஞ்சல் அதிவிரைவு நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். உ.பி.யின் தென்பகுதிகளை இணைக்கும் வகையில் 341 கி.மீ தொலைவுக்கு 6 வழிச்சாலையாக இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ22,500 கோடி மதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதேசாலையில் குரேபர் என்ற இடம் அருகே போர் விமானங்கள் அவசர காலத்தில் இறங்குவதற்காக 3.2 கி.மீ. நீளத்துக்கு விமான ஓடு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உ.பி.யின் ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் இதேபோல் போர் விமானங்கள் அவசர காலத்தில் இறங்குவதற்கான விமான ஓடு பாதை அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் விமான ஓடுபாதைகளைக் கொண்ட முதல் மாநிலமாக உ.பி. பெருமை கொள்கிறது.

போர் விமானத்தில் வந்த பிரதமர் மோடி
இந்த பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி, IAF C-130 ஹெர்குலிஸ் போர் விமானத்தில் குரேபர் விமான ஓடுபாதையில் வந்து தரை இறங்கினார். இதனைத் தொடர்ந்து விழா மேடைக்கு கார் மூலம் சென்றார் பிரதமர் மோடி. குரேபர் விமான ஓடு பாதை திறக்கப்பட்டதை முன்னிட்டு மிராஜ்2000, ஹெர்குலிஸ், சுகோய் உள்ளிட்ட போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் இந்த இடத்தில் நடைபெற்றன. இவற்றை பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் மேடையில் இருந்து பார்த்து மகிழ்ந்தனர்.

போர் விமானம்- மோடி நெகிழ்ச்சி
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 3 ஆண்டுகளுக்கு முன்னர் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே-க்கு அடிக்கல் நாட்டினேன். அப்போது இந்த நெடுஞ்சாலையில் போர் விமானத்தில் வந்து தரை இறங்குவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த நெடுஞ்சாலை ஏழைகள், விவசாயிகள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்புக்கும் பயன்படும். உ.பி. மாநிலத்தின் முந்தைய முதல்வர்கள் அனைவரும் தங்களது வீடுகளும் உறவினர்களும் வசிக்கின்றன பகுதிக்குதான் முன்னுரிமை கொடுத்தனர். ஆனால் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளை செய்திருக்கிறார்.

விமானப் படையில் முக்கிய இடம்
இதே நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் இறங்குவதற்கான விமான ஓடுபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் நமது தேசத்தின் போர் விமானங்கள் தரை இறங்குவதற்கு வசதியாக இந்த விமான ஓடு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையில் இனி பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை மிக முக்கியமான விமான ஓடுபாதை தளமாக இடம்பெறப் போகிறது. நமது போர் விமானங்கள் இந்த நெடுஞ்சாலையில் வந்திறங்கும். தேசத்தின் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் புறக்கணித்தவர்களை நோக்கி சீறியபடி இந்த போர் விமானங்கள் வந்திறங்கும். 2014-ம் ஆண்டு இந்த தேசத்துக்கு பணியாற்றுவதற்கு எனக்கு நீங்கள் வாய்ப்பு அளித்தீர்கள். ஆனால் அப்போதைய உ.பி. அரசு (அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அரசு), மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படவில்லை. தங்களுக்கு வாக்களித்த மக்களை அப்போதைய அரசு ஏமாற்றியது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் குரேபர் விமான ஓடுபாதையில் இருந்து ஹெர்குலிஸ் போர் விமானம் மூலம் டெல்லி புறபப்ட்டார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications