பயங்கரம்.. டெல்லியில் காணாமல் போன 3 வயது குழந்தை ..உ.பி.யில் தலை இல்லாத சடலமாக கண்டெடுப்பு.. நரபலி?
லக்னோ: டெல்லியில் காணாமல் போன 3 வயது குழந்தை, உத்தரபிரதேசத்தில் தலை இல்லாத சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக வட மாநிலங்களில் நரபலி கொடுக்கும் கொடூரச் சடங்குகள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இந்தக் குழந்தையும் நரபலி கொடுக்கப்பட்டிருக்குமா என்ற ரீதியில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் அந்தக் குழந்தையின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் 16 வயது சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வீட்டு வாசலில் விளையாடிய குழந்தை
டெல்லியின் ப்ரீத் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் சந்த் (36). வங்கி அதிகாரியான இவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. காலையில் கிஷோர் பணிக்கு சென்றுவிடுவதால், வீட்டில் அவரது மனைவியும், குழந்தையும் மட்டுமே தனியாக இருப்பார்கள். இதனிடையே, கடந்த 30-ம் தேதி வழக்கம் போல கிஷோர் வேலைக்கு சென்றுவிட, குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது.

திடீரென மாயம்
இந்நிலையில், வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த கிஷோரின் மனைவி, குழந்தையின் சத்தம் சிறிது நேரமாக கேட்காததால் சந்தேகமடைந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கு குழந்தை இல்லாததை கண்டு திடுக்கிட்ட அவர், அந்தப் பகுதி முழுவதும் குழந்தையை தேடி அலைந்தார். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது கணவருக்கு அவர் தகவல் தெரிவித்ததை அடுத்து, இதுகுறித்து போலீஸுக்கு புகார் அளிக்கப்பட்டது.

தலை இல்லாத சடலம்
இதன்பேரில், போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து டெல்லி முழுவதும் குழந்தையை தேடி வந்தனர். ஆனால் குழந்தை குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கரும்புத் தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் குழந்தை, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக உ.பி. போலீஸார் டெல்லி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, போலீஸார் அங்கு சென்று பார்த்த போது அது டெல்லியில் மாயமான குழந்தை என்பது தெரியவந்தது.

16 வயது சிறுவன் கைது - நரபலியா?
இதையடுத்து, குழந்தையின் உறவினர்கள், வீட்டுக்கு அருகே இருப்பவர்களிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீஸாருக்கு அவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், காவல் நிலையத்துக்கு அவனை அழைத்துச் சென்று விசாரிக்கையில், அவன்தான் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. எனினும், எதற்காக அவன் குழந்தையை கொலை செய்தான் என இதுவரை தெரியவில்லை. போலீஸார் தொடர்ந்து அவனிடம் விசாரித்து வருகிறார்கள். குழந்தை கொல்லப்பட்ட பாணியை பார்க்கும் போது, இது நரபலியாகவே இருக்கும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications